அன்வார்: கள்ளப் பண வெளியேற்றம் மீது பாங்க் நெகாரா பேச வேண்டும்

GFIநாட்டிலிருந்து வெளியே செல்லும் கள்ளப் பண அளவு கூடிக் கொண்டே போகும் பிரச்னை பற்றி நடத்தப்படும் விவாதத்தில் பாங்க் நெகாரா கவர்னர் ஜெட்டி அக்தார் கலந்து கொண்டு பேச வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜிஎப்ஐ என்ற உலக நிதி நேர்மை அமைப்பு அண்மையில் வெளியிட்ட தகவல்கள் மிகவும் கவலை அளிப்பதாக வருணித்த அவர், அந்த விவாதத்தில் பங்கு கொள்ளுமாறு தாம் அனைத்து பக்காத்தான் ராக்யாட் மந்திரி புசார்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதப் போவதாகவும் சொன்னார்.

“அந்த விவாதத்தில் எங்களுடன் ஜெட்டியும் கலந்து கொள்வார் என நான் நம்புகிறேன். அம்னோ, பிஎன் உறுப்பினர்களும் அதில் பங்கேற்கலாம். பெரும்பாலும் அடுத்த மாதம் அதனை நடத்த நாங்கள் எண்ணியுள்ளோம்.”

“2009க்கான ஜிஎப்ஐ அறிக்கை தவறானது, அந்தத் தொகை மிகவும் குறைவானது என்றும் பிரச்னையைச் சமாளிக்கப்படும் என்றும் நிதித் துணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.”

“ஆனால் 2009ல் 30.41 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த கள்ளப்பண வெளியேற்றம் 2010ல் 64.38 பில்லியன் டாலராகக் கூடியுள்ளது. அது இரு மடங்கு அதிகமாகும். அரசாங்க நடவடிக்கைகளும் அமலாக்கமும் தோல்வி கண்டுள்ளதையே அது உணர்த்துகின்றது,” என்றும் அன்வார் சொன்னார்.

அத்துடன் நிதி அமைச்சருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தின் தோல்வியையும் அது காட்டுகிறது என்றும் அவர் வருணித்தார்.

2009, 2010ம் ஆண்டுகள் ‘மிக முக்கியமான ஆண்டுகள்’ எனத் தெரிவித்த அன்வார், முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்குப் பதில் நஜிப் பொறுப்பேற்று நிர்வாகம் செய்த ஆண்டுகள் என்றார்.

“பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் கட்டுக்குள் வைத்திருக்கவும் நஜிப் தவறி விட்டார் என்பதே அதன் அர்த்தம்.  அத்துடன் ஊழல் பிரச்னையையும் அவர் தடுக்கத் தவறி விட்டார். அவற்றுக்கு பதில் அளிக்குமாறு நான் நஜிப்புக்கு வெளிப்படையாகவே சவால் விடுக்கிறேன்.

“ஜிஎப்ஐ வெளியிட்டுள்ள அறிக்கைக்கு நஜிப்பும் பாங்க் நெகாராவும் ஏன் இன்னும் பதில் அளிக்கவில்லை ? நிதி, பொருளாதார விஷயங்கள் இப்போது யார் பொறுப்பில் உள்ளது ?” என அன்வார் வினவினார்.