தீபக் ‘ஆதரவாளர்’ அடையாளம் இரண்டாம் பட்சமே என்கிறது பிகேஆர்

anwarதீபக் ஜெய்கிஷன் கொடுத்துள்ள தகவலுடன் ஒப்பிடுகையில் அவருக்கு ஆதரவு அளிக்கின்றவர்களுடைய அடையாளம் இரண்டாம் பட்சமே என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பில் புதிய ஆதாரங்களையும் ஊழல், ஆதாரங்களை அதிகாரிகள் மறைத்தது ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும்  தீபக் அளித்துள்ளார் என இன்று அன்வார் நிருபர்களிடம் சொன்னார்.

“அவை கிரிமினல் நடவடிக்கைகள், யாரோ அதற்குப் பின்னணியில் இருப்பதாக நீங்கள் சொல்லக் கூடாது. நாங்கள் புலனாய்வு செய்வோம் என நீங்கள் சொல்ல வேண்டும். குற்றத்தை மறைக்கக் கூடாது. அது தான் முக்கியமான விஷயம்,” எனக் குறிப்பிட்ட அவர், தீபக் தகவல்களை அம்பலப்படுத்தியதற்குப் பின்னணியில் தாம் இருப்பதாக அம்னோ வலைப்பதிவாளர்கள் சொல்லிக் கொள்வது குறித்து நான் வியப்படையவில்லை.”

“ஆனால் அந்தத் தகவல்களை யார் அம்பலப்படுத்துகிறார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அது தீபக் ஆகும். அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் ரோஸ்மா மான்சோருக்கும் நெருக்கமான குடும்ப நண்பர்.  அவர்கள் (நஜிப், ரோஸ்மா) அதற்குப் பதில் சொல்ல வேண்டும்,” என்றார் அவர்.

தீபக் செய்வதைப் போன்று சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு அந்த முறை மக்களை அனுமதிக்கவில்லை என்றும் அன்வார் கருதுகிறார்

“அம்னோவைப் போன்ற நிலையை நீங்கள் (ஊடகங்கள்) எடுத்தால் – அதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது மீது கவனம் செலுத்தப்படும். அது நல்லதல்ல. அம்பலப்படுத்தப்பட்ட விஷயங்களைப் பாருங்கள்.”

“ஆதாரம் இல்லாமல் யார் மீதும் களங்கம் கற்பிப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். தீபக் சொல்வது உண்மையோ பொய்யோ அதற்கு அவர் தான் பொறுப்பு,” என பெர்மாத்தாங் பாவ் எம்பி-யும் எதிர்த்தரப்புத் தலைவருமான அன்வார் கூறினார்.

நஜிப்புக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள தீபக் தகவல்களுக்கு பின்னணியில் அன்வார் இருப்பதாக அம்னோ வலைப்பதிவாளர்கள் ஏற்கனவே பழி சுமத்தியுள்ளனர்.

தனிப்பட்ட துப்பறிவாளரான பி பாலசுப்ரமணியம் தமது முதலாவது சத்தியப் பிரமாண அறிக்கையை மீட்டுக் கொள்ளுமாறு செய்வதற்கு நஜிப் தமது உதவியை நாடினார் என தீபக் அண்மையில் பல செய்தி நிறுவனங்களிடம் கூறியிருந்தார்.

தீபக் அன்வார் மீது குற்றம் சாட்டியிருந்தால்..”

தீபக் மட்டும் அன்வாரைப் பற்றி ஏதாவது சொல்லியிருந்தால் முக்கிய நாளேடுகளின் முதல் பக்கத்தில் செய்திகளாக அது இடம் பெற்றிருக்கும் எனக் கூறி அன்வார் அந்த நாளேடுகளையும் சாடினார்.

“அந்தக் குற்றச்சாட்டுக்கள் மட்டும் எனக்கு எதிராக இருந்தால், தி ஸ்டார், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், உத்துசான் மலேசியா ஆகியவற்றில் அடுத்த 30 நாட்களுக்குச் செய்தியாக அவை வெளியிடப்படும். இங்கு குற்றச்சாட்டுக்கள் குறிப்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.”

“கணக்குகள் உள்ளன. பணம் செலுத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை. ஆனால் அந்தச் செய்திகள் முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் இந்த நாட்டில் நீர்மூழ்கிகள் பெரிய அரசியல் பிரச்னைகளாகத் திகழ்கின்றன,” என அவர் அந்த விவகாரத்தை தொடக்கிய ஸ்கார்ப்பின் ஊழல் பற்றி புன்னகையுடன் குறிப்பிட்டார்.