100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு போடப்படும் என மூசா ஹசானுக்கு மருட்டல்

phangஎம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஆலோசகர் குழு முன்னள் உறுப்பினரான ரோபர்ட் பாங், தமக்கு எதிராக தெரிவித்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் மீட்டுக் கொள்ள வேண்டும் அல்லது 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

“அவர் முன் வர வேண்டும் என நான் விரும்புகிறேன். மன்னிப்புக் கேட்பதற்கு நான் அவருக்கு ஏழு நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். இல்லை என்றால் நான் நிச்சயம் என் உரிமைகளைப் பயன்படுத்துவேன்,” என பாங் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

பாங் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக அடுத்த மூன்று நாட்களில் வழக்குப் போட எண்ணம் கொண்டிருப்பதாக டிசம்பர் 10ம் தேதி மூசாவும்  கூறியிருந்தார்.

அதன் தொடர்பில் மூசாவிடமிருந்து தமக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை என பாங் தொடர்ந்து தெரிவித்தார்.

ஆனால் தமக்கு எந்த நோட்டீஸும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த பாங், முதலில் வழக்குப் போட தாம் முடிவு செய்துள்ளதாகச் சொன்னார்.

“மூசா தாம் சொன்னதை விளக்க வேண்டும், உறுதி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.”

அந்தக் குற்றச்சாட்டுக்கள் வரம்பு மீறியவை. அவை தமது கௌரவத்துக்கும் போலீஸ் படையின் நேர்மைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் பாங் சொன்னார்.

2009ம் ஆண்டு போலீஸ் தொடர்பு முறைத் திட்டம் ஒன்றை தொடங்க மறுத்ததற்காக பாங் 24 மணி நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்வதற்கு வகை செய்தார் என மூசா கூறிய குற்றச்சாட்டு பற்றி விசாரிக்குமாறு போலீசாரைக் கேட்டுக் கொள்ளும் போலீஸ் புகாரை தாம் செய்துள்ளதாகவும் பாங் சொன்னார்.

“தயவு செய்து உண்மையைச் சொல்லுமாறு அவரிடம் சொல்வதே நான் அவர் மீது வழக்குப் போடுவதின் நோக்கமாகும்.”

“போலீசார் அதனை விசாரிக்க வேண்டும். எனக்கு அதிசயமான ஆற்றல் இருந்தால் மட்டுமே நான் போலீசார் மீது என் செல்வாக்கை பயன்படுத்த முடியும்,” என அவர் வலியுறுத்தினார்.

“என்னுடைய கௌரவம், போலீசாரின் நேர்மை ஆகியவை நிலை நிறுத்தப்படுவதற்கு உண்மை வெளியாக வேண்டும்.”

பாங், அந்தப் போலீஸ் புகாரில் 2009ம் ஆண்டு மூசாவின் முன்னாள்  உதவியாளரான ஏஎஸ்பி நூர் அஸிசுல் ரஹிம் தஹாரிம் மூசாவுக்கு எதிராக சமர்பித்த சத்தியப் பிரமாணத்தையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூசா குண்டர் கும்பல் தலைவர்களான கோ செங் போ அல்லது தெங்கு கோ, பிகே தான் ஆகியோருடன்  தொடர்புகளை வைத்திருந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதில் தில்லுமுல்லு செய்வதற்கு பிகே தான் அனுமதிக்கப்பட்டர் என்றும் அஸிசுல் தமது சத்தியப் பிரமாணத்தில் குறிப்பிட்டிருந்தார்.