நேற்று கேமரன் மலையில் காலி நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஏழை இந்தியர் ஒருவரின் வீடு எவ்வித முன்னறிவிப்புமின்றி நில இலாகாவினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (18.12.2012) பிரிஞ்சாங் நகரின் அருகில் ஓர் ஏழை இந்தியர் எழுப்பிய சிறிய குடிசை வீட்டினை ஈவிரக்கமின்றி இடித்து தரைமட்டமாக்கியுள்ளது கேமரன் மலை நில அலுவலகம்.
39 ஆண்டுகளாக, கேமரன் மலையின் நிரந்திர வாசியான நாதன் த/பெ ராமசாமி என்பவர் சொந்த வீடின்றி வாழ்ந்தவர். வேறு வழியின்றி வாடகை வீட்டில் குடியிருந்த அவர் வாடகை வீட்டு உரிமையாளர் வீட்டை வீட்டு காலிச் செய்ய சொன்னதால் வேறு வீடு கிடைக்காமல் தவித்தார். ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டமும் கேமரன் மலையில் கிடையாது என்பதால் வேறு வழி தோன்றாமல் யாருக்கும் இடையூறு இல்லாத பயன்படாத மாநில அரசு நிலத்தில் சிறு குடிசை வீட்டை எழுப்பினார்.
தனியொருவராக சில மாதங்களாக கட்டிய அவ்வீட்டில் குடிபோகப்போகும் சமயம் பார்த்து, எவ்வகை நோட்டீசும் தராமல் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிச் சென்றுவிட்டது கேமரன் மலை நில அலுவலகம்.
70- வயது நிரம்பிய தாயார், மனைவி, இரு பிள்ளைகளுடன் தெருவிற்கு வந்துவிட்டார் நாதன். தனக்கு ஒரு மாற்று வழி காண்பிக்க நில இலாகா தவறுமேயானால் நில இலாகா வாசலிலேயே பாய் விரித்து படுக்கப் போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.
கேமரன் மலை இந்தியர்களுக்கு எளிதில் வீட்டு மனை நிலங்களோ, விவசாயம் புரிய நிலங்களோ சிறிய அங்காடிகளை நடத்திக் கொள்ள நிலங்களோ இம்மாநில அரசாங்கத்தால் கொடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாகத்தான் பெரும்பாலான ஏழை இந்தியர்கள் அரசின் காலி நிலங்களை நாடவேண்டியுள்ளது. பிழைப்புக்காகவும் குடியிருப்புக்காகவும் அப்படி நாடுவோரின் இதயத்தில் இரத்தம் கசிய வைக்கிறது இந்த அரசு என பகாங் மாநில ஜசெக துணைத் தலைவர் ஜே. சிம்மாதிரி தெரிவித்தார்.
வேறுவழியின்றி அரசின் காலி நிலங்களில் பிழைப்பு நடத்தும் ஏழை இந்தியர்களின் பிழைப்பிலே மண்னைப் போட்டுள்ளது இந்த மாநில அரசு. யாருக்கும் எவ்வகை இடையூறும் தராத இவ்வகையான காலி நிலங்களில் பயிர் செய்தோ, வீடுகளை கட்டியோ, சிறிய அங்காடிகளை எழுப்பியோ பிழைப்பு நடத்தும் இந்தியர்களின் உடைமைகளை நாசம் செய்வதில் மும்முரம் காட்டுகிறது கேமரன் மலை நில அலுவலகம்.
‘நம்பிக்கை’ வையுங்கள் என்கிறது அரசு. ‘நம்பிக்கை’ வைப்பதால் வரும் வினை இதுவோ? என சிம்மாதிரி வினவினார்.