முன்னாள் இந்தோனிசிய அதிபர் பிஜே ஹபிபி தமது நாட்டுக்குத் துரோகம் செய்துள்ளதாக முன்னாள் மலேசியத் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின் தெரிவித்த கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்த அதிபர் சுசிலோ பம்பாங் யூதயோனோ, ஜைனுடின் அறிக்கை பற்றி கவலை தெரிவித்தார்.
கோலாலம்பூருக்கு இந்த மாதம் 17, 18ம் தேதிகளில் மலேசியாவுக்குச் சென்றிருந்த சுசிலோ முன்னாள் இந்தோனிசிய அதிபர் ஒருவர் மீது மலேசிய அதிகாரி ஒருவர் உள்ளூர் நாளேடுகளில் அத்தகைய கருத்துக்களைச் சொன்னதாக கூறப்படுவது மீது தாம் வருத்தமடைவதாக நஜிப்பிடம் சொன்னார்.
“நாம் இது போன்ற விவகாரங்கள் தொடர்ந்து மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என நான் நஜிப்பிடம் சொன்னேன். நம்பிக்கையும் தெரிவித்தேன்,” என சுசிலோ கிழக்கு ஜகார்த்தாவில் உள்ள Halim Perdanakusumah விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜைனுடின் அறிக்கை அவரது சொந்தக் கருத்து என்றும் ஹிபிபியைச் சந்தித்த பின்னர் அவர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கலாம் என்றும் மலேசியப் பிரதமர் சுசிலோவிடம் சொன்னதாக கூறப்பட்டது.
இது மலேசியாவில் தேர்தல் காலம் என்பதால் பல பிரச்னைகள் உணர்ச்சிகரமானதாக மாறி விடுகின்றன என்றும் நஜிப் இந்தோனிசிய அதிபரிடம் தெரிவித்தார்.
முன்னாள் இந்தோனிசிய அதிபர் ஒருவரை அவமானப்படுத்துவதற்கு தாம் எந்தக் காரணத்தையும் காணவில்லை என சுசிலோ அந்த நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
“என்னைப் பொறுத்த வரையில் தேர்தல் நடக்கப் போகிறதோ இல்லையோ ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதிக்க வேண்டும். மற்ற நாடுகளின் தலைவர்களையோ முன்னள் தலைவர்களையோ களங்கப்படுத்தக் கூடாது,” என்றார் அவர்.
கிழக்குத் தீமோரில் பொது வாக்கெடுப்பு நிகழ்வதற்கு மேற்கத்திய வல்லரசுகள் தொடுத்த நெருக்குதலுக்கு ஹபிபி பணிந்து விட்டதாகவும் ஜைனுடின் திங்கட்கிழமை உத்துசான் மலேசியாவில் வெளியான கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தார்.
அதன் விளைவாக ஹபிபி அதிபராக இருந்த 17 மாத காலத்துக்குள் கிழக்குத் தீமோர் சுதந்திரம் அடைந்தது என்றும் அவர் சொன்னார்.
அதனால் ஹபிபி தமது நாட்டுக்கும் இனத்துக்கும் துரோகம் செய்து விட்டார் என்றும் சுஹார்த்தோ ஆட்சியைகீழறுப்புச் செய்தவர் என்றும் ஜைனுடின் எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரை முடிவில் அவர் “ஏகாதிபத்தியத்தின் நாய்” என ஜைனுடின் குறிப்பிட்டிருந்தார்.