தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்தோருக்கு ரிம27,000-க்கு மேல் அபராதம்

1airportகேஎல் அனைத்துலக வினான நிலையத்திலும் (கேஎல்ஐஏ) குறைந்தவிலை விமான முனையத்திலும்( எல்சிசிடி) தடைசெய்யப்பட்ட இடங்களில் புகை பிடித்த 244 பேருக்கு ரிம27,000க்குமேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டோரில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் உள்ளிட்டிருந்தனர்.

தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைத்த குற்றத்துக்காக ஒவ்வொருவருக்கும் ரிம250 அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறிய சிலாங்கூர் சுகாதார இயக்குனர் டாக்டர் அஸ்மான் அபு பக்கார், குறித்த காலத்துக்குள் அபராதத்தைச் செலுத்தாதவர்கள்மீது நீதிமன்றத்தில் 2004ஆம் ஆண்டு புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்படும் என்றார். அச்சட்டத்தின்கீழ் அவர்கள் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் ரிம10,000 அபராதம் அல்லது ஈராண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

“கேஎல்ஐஏ-இலும் எல்சிசிடி-இலும் தடைசெய்யப்பட்ட இடங்களில் பொதுமக்கள் புகைப்பது பற்றி நிறைய  புகார்கள் கேஎல்ஐஏ சுகாதார அலுவலகத்துக்கு வந்துள்ளன.

“அதன் விளைவாக மலேசிய விமான நிலைய பெர்ஹாட்டின் ஒத்துழைப்புடன் புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கை டிசம்பர் 16-இலிருந்து இரண்டு நாள்களுக்கு வேற்கொள்ளப்பட்டது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

-பெர்னாமா