13வது பொதுத் தேர்தல் வேட்பாளர்களை எம்ஏசிசி ஆராய வேண்டும் என்ற யோசனையை அம்னோ ஆதரிக்கிறது

shafie13வது பொதுத் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளர் பட்டியலை வேட்பாளர்களுடைய பின்னணிகளை ஆராய்வதற்காக எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்பிக்க வேண்டும் என்ற யோசனையை அம்னோ ஆதரித்துள்ளது.

அந்தத் தகவலை அம்னோ உதவித் தலைவர்களில் ஒருவரான ஷாபியி அப்டால் இன்று வெளியிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வேட்பாளர்களுக்கு இருப்பது தெரிய வருவதையும் ஊழலில் சம்பந்தப்படுவதையும் தடுப்பதற்கு அந்த யோசனை பேருதவியாக இருக்கும் என அவர் கருதுகிறார்.

“நான் அதனை முழுமையாக ஆதரிக்கிறேன். காரணம் அந்த வேட்பாளரிடம் பிரச்னை இருப்பது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. இதில் செலவு மட்டும் சம்பந்தப்படவில்லை. மக்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது,” என பாசிர் பூத்தேயில் தோக் பாலி மீனவர் மறுகுடியேற்றத் திட்டத்துக்கு வருகை அளித்த போது முகமட் ஷாபியி கூறினார்.

தேர்தல் வேட்பாளர்களை ஆய்வு செய்யும் பொருட்டு எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை எம்ஏசிசி-யிடம் சமர்பிக்க வேண்டும் என அந்த ஆணையத்தின் கலந்தாய்வு, ஊழல் தடுப்புக் குழுத் தலைவர் ஜோஹான் ஜபார் யோசனை கூறியுள்ளது பற்றி அவர் கருத்துரைத்தார்.

தோக் பாலியில் மீனவர் மறுகுடியேற்றத் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது, கிளந்தானை கூட்டரசு அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு என கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சருமான முகமட் ஷாபியி கூறினார்.

மொத்தம் 38 ஹெக்டர் சம்பந்தப்பட்டுள்ள அந்தத் திட்டத்தில் 300 வீடுகள், சூராவ், பாலர் பள்ளி, பலநோக்கு மண்டபம் ஆகியவை கட்டப்படும். அதற்கு மொத்தச் செலவு 30.88 மில்லியன் ரிங்கிட்.

-பெர்னாமா

TAGS: