வார இறுதியில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் உமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது

umarமாணவர் போராளியான உமார் முகமட் அஸ்மி காஜாங் சிறைச்சாலையில் வார இறுதியக் கழித்த பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவர் மேல் முறையீடு செய்வதற்காக அந்தத் தண்டனையை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அமிலியா தீ நிறுத்தி வைத்தார். ஆனால் அவர் ஜாமீன் தொகையை ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து ஐயாயிரம் ரிங்கிட்டாக உயர்த்தியதுடன் பல நிபந்தனைகளையும் விதித்தார்.

அடுத்தடுத்த நீதிமன்ற மேல் முறையீட்டு நடவடிக்கைகளில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் இது போன்ற குற்றங்களில் சம்பந்தப்படக் கூடாது என்பதும் அவற்றுள் அடங்கும்.

“அவர் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் அரசாங்கத் தரப்பு உடனடியாக அவரது ஜாமீனை ரத்துச் செய்யும். அதனால் உமார் தமது தண்டனைக் காலத்தை தொடர வேண்டியிருக்கும்.”

ஜாமீன்  காலத்தில் தமது புதல்வரைக் கண்காணிக்குமாறும் நீதிபதி தீ பார்வையாளர் அரங்கில் இருந்த உமாருடைய தந்தையான முகமட் அஸ்மி முகமட் அமினுக்கு அறிவுரை கூறினார்.umar1

ஏப்ரல் மாதம் டாத்தாரான் மெர்தேக்காவை ‘ஆக்கிரமிப்பு’ செய்திருந்த மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசாங்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய போது அவர்களுக்கு இடையூறாக இருந்ததற்காக உமாருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த வெள்ளிக் கிழமை ஒரு மாத சிறைத் தண்டனையும் ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.

அதே நாளன்று தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு உமார் வழக்குரைஞர்கள் விசாரணையை நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அரசாங்கத் தரப்பிடம் குறிப்பிட்ட நேரத்துக்குள் நோட்டீஸைக் கொடுக்க முடியவில்லை.

அதன் விளைவாக வெள்ளிக் கிழமை முதல் உமார் காஜாங் சிறைச் சாலையில் இருக்க நேரிட்டது.

தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான முறையீட்டை நீதிபதி தீ இன்று செவிமடுத்தார்.

umarஉமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு 40 பேர் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர். அவர்களில் டாத்தாரான்  மெர்தேக்காவில் நேற்றிரவு தங்கிய மாணவர் போராளிகளும் அடங்குவர்.

அவர்கள் ‘உமாரை விடுதலை செய்யுங்கள்’ எனக் கேட்டுக் கொள்ளும் பதாதைகளை வைத்திருந்தனர்.

அந்த மாணவர்கள் கடந்த சனிக்கிழமையன்று இரவு காஜாங் சிறைச்சாலைக்கு வெளியிலும் நேற்றிரவு டாத்தாரான் மெர்தேக்காவிலும் கூடி உமாருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

உமார் இன்று விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பின்னர் அவர் பொறியியல் நிறுவனம் ஒன்றுடன் தமது செய்முறைப் பயிற்சியைத் தொடருவதற்காக ஜோகூர் பாருவுக்குச் செல்வார்.