13வது பொதுத் தேர்தலில் நஜிப்புக்கு முதல் அதிகாரத்தை கொடுங்கள் என்கிறார் கோபாலா

gobi13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அதிகாரத்தை (அவரது முதலாவது) மக்கள் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு பாடாங் செராய் எம்பி என் கோபால கிருஷ்ணன் கூறுகிறார். இந்த நாட்டையும் மக்கள் நலனையும் மேம்படுத்தும் உருமாற்றத் திட்டங்களையும் கொள்கைகளையும் தொடருவதற்கு நஜிப் மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பெறுவது முக்கியம் என அவர் சொன்னார்.

“பிரதமர் சலுகை காட்டும் போக்கைப் பின்பற்றாததால் அவர் இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களிடமும் செல்வாக்குப் பெற்றுள்ளார்.”

“நாட்டுக்கு தாங்கள் ஆற்றியுள்ள பங்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் உணருவதும் உருமாற்றத்தின் நன்மைகளைச் சமமாக அனுபவிக்க முடியும் என அவர்கள் கருதுவதும் அதற்கான காரணங்கள்,” என்றும்

அவர் லூனாஸில் நேற்று 50 ஏழைக் குடும்பங்களுக்கு பள்ளிச் சீருடைகளை வழங்கிய பின்னர் கோபால கிருஷ்ணன் நிருபர்களிடம் பேசினார்.

முன்பு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் அந்தக் கட்சியிலிருந்து விலகி இப்போது சுயேச்சை உறுப்பினராக இருந்து வருகிறார்.

அரசாங்கம் கொடுக்கும் சகாயங்களை அனைத்து இனங்களும் அனுபவிப்பதை உறுதி செய்ய அரும்பாடுபடும் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இறுதியில் உயர்ந்த வருமானத்தைக் கொண்ட வளர்ச்சி அடைந்த நாடாக இந்த நாட்டை மாற்றக் கூடிய உருமாற்றத்தை நஜிப் கொண்டு வர இயலும் என்றும் கோபால கிருஷ்ணன் நம்புகிறார்.

“13வது பொதுத் தேர்தலில் நஜிப்புக்கு அவரது முதல் அதிகாரத்தை மக்கள் கொடுப்பர் என்றும் நான் நம்புகிறேன். ஏனெனில் முந்திய அதிகாரம் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்குக் கொடுக்கப்பட்டதாகும்.”

பாடாங் செராய் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள போட்டியிடுவதற்கு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

-பெர்னாமா