‘பிஎன் எதிர்க்கட்சிகளிடம் உள்ள 20 இடங்களைக் கைப்பற்ற முடியும்’

maslanவரும் பொதுத் தேர்தலில் பிஎன் எதிர்க்கட்சிகளிடம் உள்ள 20 இடங்களை மீண்டும் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியும் என அம்னோ தகவல் பிரிவுத்  தலைவர் அகமட் மஸ்லான் கூறுகிறார்.

பிஎன் நடப்பு 140 நாடாளுமன்ற இடங்களை தக்க வைத்துக் கொள்வதோடு பாஸ் வசமுள்ள 23 இடங்களில் ஐந்தையும் டிஏபி-யிடம் உள்ள 29 இடங்களில் ஐந்தையும் பிகேஆர்-இடம் உள்ள 31 இடங்களில் 10 இடங்களையும் மீண்டும் கைப்பற்ற முடியும் என அவர் உறுதியாக நம்புகிறார்.

எதிர்க்கட்சிகள் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் எதிர்நோக்கும் பிரச்னைகள் உட்பட பல அம்சங்களைக் கருத்தில் கொண்ட பின்னர் தாம் அந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

“அது நியாயமான வாதமாகும். ஏனெனில் ஏழு பிகேஆர் இடங்களில் ஏற்கனவே பிரச்னை நிலவுகின்றது. அதன் ஆறு நடப்பு உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி சுயேச்சைகளாக மாறியுள்ளனர். உலு சிலாங்கூரில் அது தோல்வி கண்டுள்ளது.”

தகவல் பிரிவின் சமூக நல பொழுதுபோக்கு மன்றத்தின் தொழில் நிபுணத்துவ பயிற்சி வகுப்பு ஒன்றை மலாக்காவில் அதன் முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தாம் தொடக்கி வைத்த சடங்கில் கலந்து கொண்ட பின்னர் அகமட் நிருபர்களிடம் பேசினார்.

அவர் பிரதமர் துறையின் துணை அமைச்சரும் ஆவார். பிஎன் வெற்றியை உறுதி செய்வதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தலைமைத்துமும் முக்கியமான அம்சம் என்றும் அகமட் குறிப்பிட்டார்.

-பெர்னாமா

 

TAGS: