பசுமை இயக்கத்தினர் டாத்தாரானில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவர்

Himpunan Hijauபல்வேறு சுற்றுச்சூழல், சமூகப் பிரச்னைகள் மீது ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் 18 பேர் வரும் வியாழக்கிழமை இரவு எட்டு மணி தொடக்கம் 100 மணி நேரத்துக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவிருக்கின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் அவர்களுடைய போராட்டம் நிறைவுக்கு வரும் என அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யும் ‘பொது அபாயங்களுக்கு எதிரான மலேசிய இளைஞர் அமைப்பு’ கூறியது.

பதின்ம வயதினரும் ஒய்வு பெற்றவர்களும் அந்தப் போராட்டத்தின் போது போத்தலில் அடைக்கப்பட்ட நீரை மட்டும் பருகுவர்.

லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு நிலையம், பாகாங் தங்கச் சுரங்கத்தில் சைனாய்ட் பயன்படுத்தப்படுவது, பெங்கெராங் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், சரவாக்கில் பல அணைக்கட்டுக்கள் ஆகியவை ஏற்படுத்தக் கூடிய மருட்டல்கள் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த நிகழ்வு நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு அரசு சாரா அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் பல தலைப்புக்களில் உரையாற்றுவர் என ஏற்பாட்டாளர்களின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தேசியவாதம் பற்றி பெர்சே 2.0 நடவடிக்கைக் குழு உறுப்பினர் வோங் சின் ஹுவாட்-டும் சிவில் சமூக இயக்கம் பற்றி பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வனும் பேசுவார்கள்.

எல்லா சொற்பொழிவுகளும் இரவு 8 மணி தொடக்கம் 10 மணி வரை நடைபெறும்.

“உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு அளிக்க பொது மக்கள் திரண்டு வந்து இந்த நாட்டைப் பாதித்துள்ள சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

அந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் அந்த அமைப்பின் முக நூல் பக்கத்தில் உள்ள பதிவு பாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.