முன்னாள் இசி தலைவர்: தேர்தல் முறை கறை படிந்தது அல்ல. ஆனால் முழுமையில்லாதது

Rashidநாட்டின் தேசியத் தேர்தல் முறையை ‘தூய்மையானது’ என முன்னாள் இசி என்ற தேர்தல் ஆணையத்தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தற்காத்துப் பேசியுள்ளார்.

என்றாலும் நடப்புத் தேவைகளுக்கு ஏற்ப முழுமையில்லாத பல அம்சங்கள் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

அப்துல் ரஷிட் மொத்தம் 27 ஆண்டுகள் இசி-யில் பணியாற்றியுள்ளார். அதில் 17 ஆண்டுகள் ஆணையச் செயலாளராகவும் 10 ஆண்டுகள் அதன் தலைவராகவும் இருந்தார்.

நாட்டின் தேர்தல் முறை கறை படிந்தது என வாதாடும் யாருடனும் விவாதம் புரிவதற்குத் தாம் தயார் என்றும்  அவர் சொன்னார்.

ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட நடப்பு முறை அப்போது முழுமையாக இருந்தது என விளக்கிய அப்துல் ரஹ்மான், பல உலக மாற்றங்களை அறிந்துள்ள மக்களுடைய தேவைகள் மாறியிருப்பதால் நடப்பு சூழ்நிலைக்கு அது முழுமையானது இல்லை என்றார்.

“அது முழுமையாக இருந்தது. ஆனால் இப்போது மக்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் அது இப்போது முழுமையாக இல்லை.”

“மக்கள் உணரும் போது (அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்) நம்மிடம் ஏன் இது இல்லை, அது ஏன் இங்கு இல்லை என வினவுகின்றனர். அதனால் குழப்பம் ஏற்படுகின்றது. என்றாலும் நமது தேர்தல் முறை தூய்மையானது.”

“அது கோணலானது என்ற எண்ணத்துடன் அதனை பார்க்க வேண்டாம். அரசாங்கம் சட்டப்பூர்வமானது. அவர்களுக்கு  வாக்களிக்க உரிமை உள்ளது,” என அவர் சொன்னதாக இன்று சினார் ஹரியான் ஏட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எந்தத் தரப்பும் புதிய சட்டங்களை இயற்றுவதற்கு விருப்பம் கொண்டிருந்தால் தம்முடைய அனுபவத்தையும் அறிவாற்றலையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அப்துல் ரஷிட் சொன்னார்.

“இப்போது உள்ளவர்கள் அகந்தை பிடித்தவர்கள். என்னைப் போன்று விவேகமானவர்களை அவர்கள் விரும்புவதில்லை. பரவாயில்லை. நான் உதவி செய்ய வேண்டும் என அவர்கள் விரும்பினால் நான் எல்லாவற்றையும் செய்வேன். ஆனால் மக்கள் என்னை வந்து பார்ப்பதில்லை. காரணம் நான் அறிவாளி அல்ல என அவர்கள் எண்ணுகின்றனர்.”

ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்று புதிய வாக்காளர் பட்டியலைத் தயார் செய்யலாம் என அவர் யோசனை கூறினார்.

எதிர்க்கட்சிகள் ‘ஆவி வாக்காளர்கள்’ எனக் குறிப்பிடும் குடியிருப்பாளர் அல்லாத வாக்காளர்களைக் குறைப்பதற்கு அந்த நடவடிக்கை உதவும் என அப்துல் ரஷிட் எண்ணுகிறார்.

என்றாலும் அந்த நடவடிக்கைக்கு 50 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என அவர் மதிப்பிடுகிறார்.

“ஆண்டுக்கு 50 மில்லியன் ரிங்கிட் என்பது இந்த நாட்டுக்கு சுலபமாகும். ஏனெனில் நாம் பில்லியன் கணக்கில் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் போல அதனை மேற்கொள்ளலாம்,” என்றார் அவர்.

தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் பெர்சே 2.0ன் கோரிக்கைகளும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு வழங்கிய யோசனைகளும் முழுமையானதாக இல்லாததால் அரச விசாரணை ஆணையத்தை அமைக்கும் யோசனையை கடந்த திங்கிட்கிழமை வெளியான முதல் பகுதி பேட்டியில் அப்துல் ரஷிட் தெரிவித்திருந்தார்.