மலேசிய கிறிஸ்துவ சம்மேளனம் நடத்திய தேநீர் விருந்தில் உரையாற்றிய போது தெரிவித்த கருத்துக்கள் “வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளில் நாம் கேட்கும் பாரபட்சமான எண்ணங்கள்” என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளர்.
அந்த நிகழ்வில் நஜிப் ஆற்றிய உரையை செய்தி இணையத் தளங்களில் வாசித்த பின்னர் தாம் அவ்வாறு கருதுவதாக ஆயர் தான் சொன்னார். அவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
“நான் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் வெறுப்பாகப் பேச விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பிரதமருடைய உரையை முழுமையாக ஆய்வு செய்தால் உண்மை நிலவரத்துடன் சற்றும் தொடர்பு இல்லாத இனிப்பான உணர்வுகள் மட்டுமே மிஞ்சுகின்றன.”
பிரதமரும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் கலந்து கொண்ட அந்த விருந்தில் பேசிய நஜிப், கிறிஸ்துவ சமூக ஒரங்கட்டப்படவில்லை என உறுதி அளித்தார்.
“நான் ஒரு சமூகத்துக்கு மட்டும் பிரதமராக இருக்க விரும்பவில்லை,” என வலியுறுத்திய அவர், நான் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர், நான் அதனை திரும்பத் திரும்ப கூறி வருகிறேன் என்றார்.
“பிரதமருடைய பணியில் இன அடிப்படையும் சிறப்புத் தன்மையும் இருக்க வேண்டும் என மலேசிய நாட்டை வழி நடத்தியுள்ள எந்த அனுபவம் வாய்ந்த பிரதமரும் நினைத்திருக்க மாட்டார்கள்.”
“தாம் பல்வகைத் தன்மையைக் கொண்ட நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என்றும் அதில் ஒரு பகுதிக்கு மட்டும் இல்லை,” எனச் சொல்வது பொருத்தமானது என நஜிப் கருதியது வேடிக்கையாக இருக்கிறது.”
ஆயர் பால் தான் மலாக்கா ஜோகூர் கத்தோலிக்க தேவாலயத் திருச்சபையின் தலைவரும் ஆவார். மலேசியா, சிங்கப்பூர், புருணை ஆகியவற்றில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவர் என்னும் அவரது பொறுப்பு வரும் டிசம்பர் 31ம் தேதி நிறைவு காண்கிறது.
“நஜிப் அவ்வாறு சொல்லியிருப்பது, அவரது அலுவலகம் தனது விரிவான பொறுப்புக்களிலிருந்து விலகிச் சென்றுள்ளதைக் காட்டுகிறது,” என்றும் ஆயர் பால் தான் சொன்னார்
“அவரது அலுவலகத்துக்கு பரந்த எண்ணங்கள் இருக்குமானால் கிறிஸ்துவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண்டாத்தாங் என ஏன் முத்திரை குத்தப்பட்டனர். இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவ வெறுப்புணர்வைத் தோற்றுவிக்கும் பொருட்டு தவறான குற்றச்சாட்டுக்களை ஐந்தாம் பிரிவினர் சுமத்திய போது ஏன் அதிகாரத்துவத் தரப்புக்கள் ஏன் தடுத்து நிறுத்தவில்லை ?”
வாக்குறுதிகள் மீறப்பட்டன
ஆயர் பால் தான், MCCBCHST என்ற மலேசிய பௌத்த, இந்து, கிறிஸ்துவ சீக்கிய, தாவே ஆலோசனைப் பேரவையை 1984ல் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அதன் சார்பிலும் மலேசிய கிறிஸ்துவ சம்மேளனம் சார்பிலும் தாம் மூன்று மலேசியப் பிரதமர்களை (டாக்டர் மகாதீர் முகமட், அப்துல்லா அகமட் படாவி, நஜிப் ரசாக்) சந்தித்துள்ளதாக அவர் சொன்னார். “அந்த மூவரும் தாங்கள் நடத்திய கலந்துரையாடலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
MCCBCHST, மலேசிய கிறிஸ்துவ சம்மேளனம் ஆகியவற்றுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் ஆதரவாகவும் வாக்குறுதி அளிக்கும் வகையிலும் நடந்து கொள்கின்றனர். ஆனால் சமய விவகாரங்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான சூழ்நிலைகளிலும் பொது அரங்கில் பிரச்னைகள் எழும் போதும் வேறு விதமாகப் பேசுகின்றனர்,” என அந்த ஆயர் நினைவு கூர்ந்தார்.
“ஆகவே என்னைப் பொறுத்த வரையில் பிரதமருடைய அண்மைய வாக்குறுதிகள் வெறும் மாயையே.”
“கல்வி, சமூக நலன், சுகாதாரக் கவனிப்பு ஆகிய துறைகளில் கிறிஸ்துவர்கள் ஆற்றியுள்ள பங்கு மறக்கப்படவில்லை என அவ்வப்போது வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் களத்தில் காணப்படும் சூழ்நிலைகள் “மற்றவர்கள் தாழ்வு மனப்பான்மையை பெறக் கூடாது என்பதற்காக அவர்களுடைய பங்கு மறைக்கப்படுகின்றது அல்லது குறைக்கப்படுகின்றது.”