உலகத் தமிழர் இரண்டாவது பாதுகாப்பு மாநாடு நாளை (28.12.2012) கோலாலம்பூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் காலை மணி 8.00 முதல் இரவு 11.00 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. [ VIDEO | 2.30 mins ]
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் இம்மாநாட்டில் கலந்து சிறப்பிக்க உள்ள அதேவேளை, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் காலிட் இப்ராஹிம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
உலகத் தமிழர்கள் தமது இனக்காப்பினை உறுதி செய்து, இன்னுமொரு அழிவு வரா வண்ணம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துவதே இம் மாநாட்டின் நோக்கம் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை உலகில் எந்த நாட்டிலும் வாழும் தமிழர்களுக்கும் ஏற்படக்கூடாது. இதனை ஒரு பாடமாக கொண்டு உலகத்தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவரவர் வாழும் நாடுகளில் இணவுணர்வுடன் உரிமைக் குரல் கொடுக்கும் தமிழர் மையங்கள் வழி பாதுகாப்பு உணர்வுகள் மேலோங்கி காத்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் என மாநாட்டு இயக்குநர் ம. பொன் ரெங்கன் கூறினார்.
இந்நிகழ்வு முற்றிலும் இலவசம். இதில் சிங்கப்பூர், கனடா, இந்தோனிசியா, இலங்கை, மொரிசியசு, தாய்லாந்து, மியன்மார், புணை, அமெரிக்கா, இலண்டன் ஆகிய பல நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்து கொள்வார்கள்.
உலகத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இம்மாநாட்டில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறிய பொன் ரெங்கன், தமிழ் உணர்வாளர்களின் வருகை நிச்சயமாக, முடிவான தீர்வுகளை தரும் என்பது நமது நம்பிக்கை என்றார்.
இம்மாநாட்டில் இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், யோகேஸ்வரன், ஸ்ரீதரன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.