மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி), 2013 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரிம200 தள்ளுபடி ரிம500க்கும் குறைவான விலையில் விற்கப்படும் சுட்டிப்பேசிகளுக்கு (smartphones) மட்டுமே என்பதை விளக்கியுள்ளது.
அதன் இணையத்தளத்தில் இந்த விளக்கத்தை வெளியிட்ட எம்சிஎம்சி, தள்ளுபடி பெறுவதற்கான தகுதிகளையும் விவரித்திருந்தது.
– 21-30 வயதுக்குட்பட்ட மலேசிய குடிமக்கள் மட்டுமே அதற்குத் தகுதி பெறுவர்;
-அவர்களின் மாத வருமானம் ரிம3,000 அல்லது அதற்குக் குறைவாக இருந்தல் வேண்டும்;
-ஓர் இளைஞர் ஒரு சுட்டிப்பேசி மட்டுமே வாங்க முடியும்;
நேற்று வெளியிடப்பட்டிருந்த அறிவிக்கையில் இத்திட்டதிற்கென அரசாங்கம் ரிம300 மில்லியன் ஒதுக்கியிருப்பதாகவும் அதன்வழி 1.5மில்லியன் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தள்ளுபடியைப் பெறுவதற்கு இளைஞர்கள் 2013 ஜனவரி 1 தொடங்கி டிசம்பர் 31வரை எம்சிஎம்சி இணயத்தளத்தில் விண்ணப்பம் செய்துகொள்ளலாம்.
இணையத்தள விண்ணப்பத்தில் வலப்பக்க மூலையில் Janji Ditepati, Mulai 1 Januari 2013, Budget 2013 (ஜனவரி முதல்நாளிலிருந்து பட்ஜெட் 2013 வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது) என்று நீலநிற முத்திரை குத்தப்பட்டிருந்தது.
ஆனால், இன்று காலையில் மலேசியாகினி தேடிப் பார்த்தபோது இணையத்தளம் கிடைக்கவில்லை.
தகுதிகள் இறுதிசெய்யப்பட்டவை
மலேசியாகினி எம்சிஎம்சியைத் தொடர்புகொண்டு பேசியபோது, எம்சிஎம்சி உதவி இயக்குனர் பைருல் ரிசால், சுட்டுப்பேசிக்கான தள்ளுபடி தொடர்பில் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவை இறுதிசெய்யப்பட்ட தகுதிகள் என்பதை உறுதிப்படுத்தினார்.
இணையத்தளத்தில் சில திருத்தங்கள் செய்யப்படுவதாகவும் அதனால்தான் இன்று அது அகற்றப்பட்டது என்றும் தெரிவித்தார்.
“சிலவற்றைத் திருத்த வேண்டியுள்ளது….. நிர்வாகம் அதன் இணையத்தளத்தில் Janji Ditepati, Mulai 1 Januari 2013, Budget 2013 என்று முத்திரை குத்தப்பட்டிருப்பதை ஏற்கவில்லை. அதனால் அதை அகற்ற வேண்டியுள்ளது”, என்றார்.
ரிம500-க்கும் குறைந்த விலையுடைய சுட்டிப்பேசிகளுக்கு மட்டும்தான் தள்ளுபடி என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பது பற்றிக் கேட்டதற்கு பைருல் கருத்துத் தெரிவிக்க மறுத்தார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், செப்டம்பர் 28-இல், 2013-க்கான பட்ஜெட்டை அறிவித்தபோது, மாதம் ரிம3,000 அல்லது அதற்குக் குறைவாக வருமானம் பெறும் அல்லது மாத வருமானம் இல்லாதிருக்கும் 21க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞர்கள் அங்கீகரிப்பட்ட விற்பனை மையங்களில் வாங்கும் 3ஜி சுட்டிப்பேசிகளுக்கு ரிம200 தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.