காணாமல்போன விமானங்கள் பற்றித் தற்காப்பமைச்சிடம் கேளுங்கள், ஜாமுக்கு அன்வார் பதில்

1anwarபிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்பு தகவல் அமைச்சராக இருந்துள்ள ஜைனுடின் மைடினுக்கு அரச மலேசிய விமானப் படை (டியுடிஎம்)க்கு விமானங்கள் வாங்குவதில் சம்பந்தப்பட்ட அமைச்சு எதுவென்று நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும் என்று கூறி அதன் தொடர்பில் முறைகேடுகள் நிகழ்ந்திருந்தால் அப்போது தற்காப்பு அமைச்சராக இருந்தவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.

1anwar1ஜைனுடின் அவரின் வலைப்பதிவில் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அன்வார் இவ்வாறு கூறினார். ஜைனுடின் தம் பதிவில், அன்வார் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் விமானம் வாங்கியதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறியிருந்தார். அவ்விசயத்தில் நிதி அமைச்சின் அதிகாரம் ஒரு வரம்புக்கு உட்பட்டது என்று அன்வார் தெரிவித்தார்.

“அதில் தற்காப்பு அமைச்சுக்குத்தான் முடிவு செய்யும் அதிகாரம். விலை பற்றிய பேச்சின்போதுதான் நிதி அமைச்சு வரும். சொல்லப்படும் விலை நியாயமானதுதானா என்பதைத் தீர்மானிக்கும்”, என்றாரவர்.

ஜைனுடின் தம் பதிவில், “அன்வார், துணைப் பிரதமராக இருந்த காலத்தில் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி டியுடிஎம் இந்தோனேசியாவிடமிருந்து சிஎன்235 ரக விமானங்களை வாங்க வைத்தார்” என்று தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதற்கு அன்வார் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

“பிஜே ஹபிபி அதிபராக இருந்த” இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்குமிடையில்“உறவுகளை வலுப்படுத்தவே” அவ்விமானங்கள் வாங்கப்பட்டன என்றும் ஜைனுடின் கூறினார்.

ஆர்டர் கொடுக்கப்பட்டவை எட்டு விமானங்கள்;ஆனால், வந்து சேர்ந்தவை ஆறு மட்டுமே என்று தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக அவர் சொன்னார்.தகவல் தெரிவித்த வட்டாரத்தை அவர் அடையாளம் கூறவில்லை.

டியுடிஎம் இணையத்தளத்தில் சிஎன்235 ரக விமானங்களின் முதல் தொகுதி 1999-இல் வந்து சேர்ந்ததாகக் கூறுகிறது. இந்தோனேசியா இராணுவ விவகாரங்கள் பற்றி விவாதிக்கும்  AnalisisMiliter.com  அவை 1995-இல் ஆர்டர் செய்யப்பட்டவை என்று கூறிற்று.

1990-இலிருந்து 1995வரை தற்காப்பு அமைச்சராக இருந்தவர் இப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். பிறகு, இப்போது நிலப் போக்குவரத்து ஆணைய (ஸ்பேட்) தலைவராகவுள்ள சைட் ஹமிட் அல்பார் 1995-இலிருந்து 1999வரை அதன் அமைச்சரானார். அதன்பின் நஜிப் 1999-இலிருந்து 2008 வரை திரும்பவும் தற்காப்பு அமைச்சரானார்.

ஹபிபி இந்தோனிய அதிபராக இருந்த காலம் 1998-1999. அன்வார் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது 998-இல்.