ஹசான் அலி அன்வார் மீது விடுத்த அறிக்கை “பொது அக்கறைக்கு உரியது”

hasanஒரினச் சேர்க்கைக்கு எதிரான மலேசியச் சட்டங்களை ‘குறை கூறிய’ பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமைச் சாடி உத்துசான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி விடுத்துள்ள அறிக்கை ‘பொது நலனுக்கு உரியது’ என இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த விவகாரம் பொது மக்கள் அக்கறை காட்டும் விஷயங்களை சம்பந்தப்படுத்துவதால் அதனை ‘வெளியிட வேண்டிய கடமை’ உத்துசானுக்கு இருப்பதாக, பிகேஆர் தலைவர் தொடுத்துள்ள 150 மில்லியன் ரிங்கிட் அவதூறு  வழக்கில் அந்த நாளேட்டின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் பிரோஸ் ஹுசேன் அகமட்  கூறினார்.

“அந்த விவகாரம்… முஸ்லிம்களுக்கும் பொதுவாக மலேசிய மக்களுக்கும் ஒரினச் சேர்க்கை, அது சம்பந்தப்பட்ட  சட்டங்கள் ஆகியவை பொது மக்களுடைய அக்கறை சம்பந்தப்பட்டதாகும்.”

“அந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் சொல்வது பொது அக்கறைக்குரிய விஷயமாகும். அது பரபரப்பைத் தூண்டும் செய்தி அல்ல. கருத்துக்களை வெளியிடுவதற்கு உத்துசானுக்கு உரிமையும் கடமையும் உண்டு,” என்றார் அவர்.hasan1

நீதிபதி விடி சிங்கத்திடம் சமர்பித்த எழுத்துப்பூர்வமான வாதத்தில் பிரோஸ் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘அன்வாரை நிராகரியுங்கள்-ஹசான் ‘ என்னும் தலைப்பில் ஜனவரி 17ம் தேதி உத்துசான் வெளியிட்ட கட்டுரைக்காக அன்வார் உத்துசான் மலேசியா மீதும் அதன் குழுமத் தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ்  இஷாக் மீது அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

மலேசியாவில் ஒரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் ‘பழமையானவை’ என்றும் அவை ‘மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்றும் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தது பற்றிய ஹசான் கருத்துக்களை உத்துசான் கட்டுரை மய்யமாகக் கொண்டிருந்தது.