முஸ்லிம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது வெவ்வேறான கருத்துக்கள் தொடர்ச்சியாக எழுவதைத் தொடர்ந்து பக்காத்தான் ராக்யாட் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் அவசரமாக நடத்தப்படவிருக்கிறது.
அந்தத் தகவலை வெளியிட்ட பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், அந்தப் பிரச்னை ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்ட போதிலும் அந்தச் சந்திப்பு நடத்தப்படும் என கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் நிருபர்களிடம் கூறினார்.
“அந்த விவகாரம் தீர்க்கப்பட்டுள்ளது. நாங்கள் அந்த விஷயம் குறித்து விவரமாக விவாதித்ததுடன் திருக்குர் ஆன் வாசகங்கள் உட்பட பல வாசகங்களை ஆய்வு செய்தோம்.”
“இப்போது அந்த விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது. அதனால் அவசரமாக கூட வேண்டியுள்ளது,” என்றார் அன்வார்.
பைபிளின் பாஹாசா மலேசியா பதிப்பில் கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு புத்ராஜெயாவை தமது கிறிஸ்துமஸ் செய்தியில் டிஏபி தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து சிக்கலான அந்த விஷயம் மீண்டும் தலை தூக்கியது.
ஆனால் அந்த சொல் சபா, சரவாக்கில் மட்டுமே பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை டிஏபி வேண்டுகோள் குறிப்பதாக பின்னர் அந்தக் கட்சி விளக்கமளித்தது.
பைபிளின் பாஹாசா மலேசியா பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் God என்ற சொல்லுக்கு ‘துஹான்’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட வேண்டும் என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் -ம் அறிவித்தனர்.
என்றாலும் முஸ்லிம்களுடைய புரிந்துணர்விலிருந்து “மற்றவர்களுடைய புரிந்துணர்வு மாறுபட்ட போதிலும் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லை அவர்கள் பயன்படுத்துவதை” முஸ்லிம்கள் நிறுத்த முடியாது என 2010ம் ஆண்டு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருந்தார்.