வாரிசான் மெர்தேக்கா கோபுரத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு கோலாலம்பூரில் இயங்கும் 21 அரசு சாரா அமைப்புக்கள் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன.
அந்த முழு பகுதியையும் தேசியப் பாரம்பரிய பகுதியாகப் பிரகடனம் செய்யுமாறும் அவை கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளன.
அந்தத் தகவலை நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் சங்கத் தலைவர் இஷாக் சுரின் வெளியிட்டார்.
‘Pertahankan Taman Merdeka Negara’ குழு ‘118 மாடி மெகா கோபுரம் வேண்டாம் எனச் சொல்வோம்’ என்னும் இயக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அவர் சொன்னார்.
கைவிடப்பட்ட தாமான் மெர்தேக்கா நெகாரா பகுதியில் PNB Merdeka Shd Bhd மேற்கொள்ளும் அந்த மெகா கோபுரத் திட்டம் கோலாலம்பூர் பெட்டாலிங் மலைப் பகுதிக்கு அருகில் உள்ள பல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களை அழித்து விடும் என அவர் கூறிக் கொண்டார்.
மெர்தேக்கா அரங்கம், நெகாரா அரங்கம், சின் வூ அரங்கம், தாமான் மெர்தேக்கா நெகாரா ஆகியவை அந்தக் கட்டிடங்களில் அடங்கும் என இஷாக் நேற்று நிருபர்களிடம் கூறினார்.
“அந்தக் கட்டிடங்கள் அனைத்தும் சுதந்திரத்துக்கு முந்திய பிந்திய கால கட்டங்களின் நினைவுச் சின்னங்களாகும்.”
“மக்களாகிய நாம் பொது இடங்கள் நம்மிடமிருந்து திருடப்பட்டதோடு மட்டுமின்றி உத்தேச 118 மாடிக் கட்டிடமும் அதனுடன் தொடரும் மேம்பாடும் நமது தேசியச் சுதந்திரச் சின்னங்களில் ஒன்றாகத் திகழும் மெர்தேக்கா அரங்கின் தோற்றத்தை முற்றாக மாற்றி விடும்.”
“அந்த திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்,” என இஷாக் மேலும் கூறினார்.
2010ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையின் போது பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக் வாரிசான் மெர்தேக்கா கோபுரத் திட்டம் குறித்து அறிவித்தார். அந்தப் பகுதியில் இப்போது பூர்வாங்க வேலைகள் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட 102 மாடிகளிருந்து 118 மாடிகளாக அந்தக் கோபுரம் கட்டப்படும் என கூட்டரசு நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு பின்னர் தகவல் வெளியிட்டது.
ஜனவரி 5ம் தேதி இயக்கம் தொடங்கும்
தாமான் மெர்தேக்கா பகுதியும் அதனைச் சுற்றியுள்ள கட்டிடங்களும் ‘மக்கள் சொத்து’ ஆகும். ஆகவே அவற்றை பொது மக்கள் பயனீட்டுக்கும் கொண்டாட்டத்துக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என் இஷாக் வலியுறுத்தினார்.
மெர்தேக்காவுக்கு முந்திய காலத்திலிருந்து தாமான் மெர்தேக்கா நெகாரா திறந்த பூங்காவாக இருந்து வருவதால் 2005ம் ஆண்டு தேசியப் பாரம்பரியச் சட்டத்தின் கீழ் அதனை தேசியப் பாரம்பரியப் பகுதியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.
தாமான் மெர்தேக்கா பகுதி பொது இடமாக நிலைத்திருப்பதற்கு சமூகங்களுடன் அரசாங்கம் கலந்தாய்வு செய்ய வேண்டும் என்றும் இஷாக் கருதுகிறார்.
இதனிடையே அந்தக் கூட்டணி ஜனவரி 5ம் தேதி சின் வூ அரங்கத்தில் இரவு 7 மணிக்கு ‘118 மாடி மெகா கோபுரம் வேண்டாம் எனச் சொல்வோம்’ என்னும் இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் என கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத் தலைமை நிர்வாக அதிகாரி தான் ஆ சாய் கூறியுள்ளார். நிருபர்கள் சந்திப்பின் போது அவரும் உடனிருந்தார்.
கோலாலம்பூர் மாநகரத்தின் பாரம்பரியம், பண்பாடு பற்றி அக்கறை கொண்டுள்ள மாநகர மக்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.