சுற்றுச்சூழல் தரம் சீரழிவதற்கு எதிராக டாத்தாரான் மெர்தேக்காவில் உண்ணாவிரதம் இருந்து வரும் போராளிகள் தங்கள் நோக்கத்தை மேலும் வலியுறுத்தும் பொருட்டு தங்கள் தலைமுடிகளை இன்று மழித்துக் கொண்டனர்.
ஒரு மாது உட்பட 11 பேர் தலையை மொட்டையடித்துக் கொண்டதாக அந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த பொது அபாயங்களுக்கு எதிரான மலேசிய இளைஞர் அமைப்பின் பேச்சாளர் தான் வோய் தியான் தெரிவித்தார்.
சரியான பாதைக்கு மக்கள் திரும்புவதை அது குறித்தது என்றும் புத்தாண்டில் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதைக் குறிக்கிறது என்றும் அவர் சொன்னார்.
டாத்தாரான் மெர்தேக்காவுக்குப் பக்கத்தில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைமையகத்துக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் தலை முடியை மழித்துக் கொள்ளும் நிகழ்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு நடைபெற்றது.
முடி திருத்துவோர் அவர்களுடைய முடிகளை மழிப்பதற்கு முன்னர் அவர்களுடைய முடிகளை வெட்டுவதற்கு முன்னர் பௌத்த பிக்கு ஒருவர் அழைக்கப்பட்டார்.
அந்த நிகழ்வை பல வழிப்போக்கர்களைக் கவர்ந்தது. சுற்றுப்பயணிகள் அவர்களை படம் பிடித்தனர்.
வியாழக்கிழமை தொடக்கம் உண்ணா விரதம் இருக்கும் அவர்கள் 100 மணி நேரத்துக்கு தண்ணீர் தவிர வேறு எதனையும் உட்கொள்வதில்லை என்ற நோக்கத்துடன் உள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணி வரையில் அவர்கள் 66 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டனர்.
குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு நிலையம், புக்கிட் கோமானில் தங்கச் சுரங்கத்தில் சைனாய்ட் பயன்படுத்தப்படுவது, பெங்கெராங்கில் எண்ணெய் சுத்திகரிப்பு பெட்ரோல் இரசாயன தொழில் கூடம் ஆகியவை உட்பட சுற்றுச்சுழலுக்குப் பாதகமாக உள்ள பல திட்டங்கள் மீது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவர்களது போராட்டத்தின் அடிப்படையாகும்.
என்றாலும் அந்த அமைப்பு லைனாஸ் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறது. அதற்கு கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை அனுமதி மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு மீது ஆழமான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அது விரும்புகிறது.