ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ளாத குவான் எங்-கை ‘கோழை’ என அமைப்புக்கள் வருணனை

heraldபினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று பல்வேறு நெருக்குதல் அமைப்புக்களைச் சார்ந்த 50 பேர் கூடி, பைபிள் மலாய் பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு விடுத்த அறிக்கையை முதலமைச்சர் லிம் குவான் எங் மீட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

என்றாலும் ஹாங்காங்கிலிருந்து இரவு 7 மணி வாக்கில் பினாங்கை வந்தடைந்த லிம் அந்தக் குழுவைச் சந்திப்பதைத் ‘தவிர்க்கும்’ வகையில் வந்திறங்கும் மண்டபத்தின் பின்புற வாசல் வழியாக வெளியேறி விட்டார்.

பெர்க்காசா, பினாங்கு முஸ்லிம் கட்டமைப்பு, பினாங்கு முகநூல் சங்கம், பினாங்கில் பிறந்த முஸ்லிம் சங்கம், ஜெலுத்தோங் குடியிருப்பாளர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் பல பாஸ் உறுப்பினர்களும் அங்கு காணப்பட்டனர்.

மாலை 6 மணி தொடக்கம் அவரது வருகைக்காக நாங்கள் காத்திருக்கும் வேளையில் லிம் எங்களைச் சந்திக்காமல் சென்று விட்டது பற்றி பினாங்கு முஸ்லிம் கட்டமைப்பு உச்சக் குழு உறுப்பினர் அஸ்மி ஜாபார் வருத்தம் தெரிவித்தார்.

டிஏபி தலைமைச் செயலாளர் பினாங்கில் உள்ள முஸ்லிம்களின் ஆத்திரத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லாத கோழை என அவர் வருணித்தார்.

பெர்னாமா