சர்ச்சைக்குரிய லைனாஸ் தொழில் கூடம் காரணமாக வரும் பொதுத் தேர்தலில் பெந்தோங்கில் பிஎன் தோல்வி கண்டால் தமது காதுகளை வெட்டிக் கொள்ளப் போவதாக பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப் அறிவித்ததாகச் சொல்லப்படுவது மீது ஹிம்புனான் ஹிஜாவ் போராளிகள் இன்று அவருடைய காது தொடர்பில் வேடிக்கை செய்தனர்.
இன்று காலை பரபரப்பான பெந்தோங் சாலைகளில் பசுமைப் போராளிகள் காது வடிவலான பிஸ்கட்களை உள்ளூர் மக்களுக்கு விநியோகம் செய்தனர். அந்த பிஸ்கட்களுக்கு அவர்கள் ‘Biskut Telinga Cap Adnan’ ( அட்னான் மாதிரியிலான காது பிஸ்கட்கள்) எனப் பெயரிட்டிருந்தனர்.
“நாங்கள் அட்னான் கருத்துக்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளோம். அவை லைனாஸ் மீது மக்கள் கொண்டுள்ள கவலைகளை சிறுமைப்படுத்துகின்றது.”
“அட்னான் உண்மையில் தமது காதுகளை வெட்டிக் கொள்வதற்கு உள்ளூர் மக்கள் உதவி செய்யும் பொருட்டு (அவருக்கு தேர்தல் தோல்வியை ஏற்படுத்தி) அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் விரும்புகின்றோம்,” என ஹிம்புனான் ஹிஜாவ் போராளி சென் சிட் யோங் கூறினார்.
ஹிம்புனான் ஹிஜாவ் இயக்கம் மேற்கொண்டுள்ள 300 கிலோ மீட்டார் கோலாலம்பூர்-குவாந்தான் பயணத்தை ஒட்டி அந்த பிஸ்கட் விநியோகம் நடத்தப்பட்டது. அந்தப் பயணத்தின் முடிவில் குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் தொழில் கூடத்துக்கு அருகில் பேரணி ஒன்றும் நடத்தப்படும்.