டாங் வாங்கி போலீஸ் நிலைய லாக்-அப்பில் கே.நாகராஜன் திடீரென இறந்து போனதை அடுத்து அவர் லாக்-அப்பில் இருந்தபோது பதிவான மூடிய சுற்றுத் தொலைக்காட்சிப் படக்கருவி (சிசிடிவி) பதிவுகளைக் காண்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் வலியுறுத்தப்பட்டிருக்கிறார்.
எல்லா போலீஸ் நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக உள்துறை துணை அமைச்சர் அபு செமான் யூசுப் கடந்த மாதம் கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்ததை பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் சுட்டிக்காட்டினார்.
பட்டர்வர்த் போலீஸ் நிலையத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நடந்ததை அடுத்து அப்படிப்பட்ட சம்பவங்களைத் தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வினவப்பட்டபோது துணை அமைச்சர் அவ்வாறு பதில் அளித்திருந்தார்.
அந்த வகையில், நாகராஜனின் திடீர் மரணத்தை விளக்க உள்துறை அமைச்சர் அந்த வீடியோ பதிவுகளைக் காண்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்றாரவர்.
“போலீஸ் தவறு எதுவும் செய்யவில்லை என்றால் அவர்கள்மேல் சொல்லப்படும் குற்றத்தை அது தெளிவுபடுத்தும். அப்படி அவர்கள் தவறு செய்ததாக தெரிய வந்தால் உரியவர்கள்மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கோபிந்த் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின்பேரில் கைதான நாகராஜன்,, மர்மமான சூழலில் லாக்-அப்பில் விழுந்ததில் இறந்தார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 21-இல் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றம் கொண்டுசெல்லப்படவிருந்த நேரத்தில் கடந்த திங்கள்கிழமை இறந்து போனார். அவரின் இறப்புக்கு போலீசார் தெரிவித்த காரணங்களை ஏற்க இயலாது என்று நாகராஜனின் உறவினர் எம்.கிருஷ்ணமூர்த்தி கூறினார். அவரின் உடம்பில் ஆழமான காயங்கள் காணப்பட்டனவாம்.
காயங்களுக்கான காரணம் தெரியவில்லை என்றாரவர்.
“இதுபோன்ற பிரச்னைகளை கேமிரா தீர்த்து வைக்கும். இறப்பு வரைக்குமான நிகழ்வுகளை அது பதிவு செய்திருக்கும்”, என்று கோபிந்த் கூறினார்.
எனவே, உள்துறை அமைச்சர் அந்த ஆதாரத்தைக் காண்பிக்க இதுவே பொருத்தமான தருணமாகும் என்றாரவர்.