தொலைபேசி கழிவுத் திட்டத்தை விற்பனையாளர்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என கெரக்கான் அச்சம்

smartவிவேகக் கைத் தொலைபேசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 200 ரிங்கிட் கழிவுத் திட்டத்தை சில தொலைபேசி விற்பனையாளர்கள் புதிய அகண்ட அலை வரிசையை வாங்குமாறு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துவதின் மூலம் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என கெரக்கான் புத்ராஜெயாவை எச்சரித்துள்ளது.

அந்த கழிவுத் திட்டத்தை விரைவாக ஆதாயம் தேடுவதற்கு தொலைபேசி விற்பனையாளர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என கெரக்கான் இளைஞர் பிரிவு துணைத் தலைமைச் செயலாளர்  இங் சீ வெய் கூறினார்.

“பெரும்பாலான இளைஞர்கள் ஏற்கனவே சொந்த அகண்ட அலை வரிசை ஏற்பாட்டைக் கொண்டுள்ளனர். எந்த நிபந்தனையும் இல்லாமல் புதிய சிறந்த கைத் தொலைபேசியையே அவர்கள் நாடுகின்றனர்,” என்றார் அவர்.

மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானத்தை கொண்ட 21 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் விவேக கைத் தொலைபேசிகளை வாங்கும் போது 200 ரிங்கிட் கழிவுத் தொகை கொடுக்கும் கூட்டரசு அரசாங்கத் திட்டம் பற்றி இங் கருத்துரைத்தார்.smart1

அந்தக் கழிவு, 500 ரிங்கிட்டுக்கும் குறைவான விலையைக் கொண்ட விவேகக் கைத் தொலைபேசிகளுக்கு மட்டுமே பொருந்தும். குறைந்த வருமானம் கொண்டவர்களை அந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டிருப்பதால் அந்த வரம்பு அவசியம் என கூட்டரசு அரசாங்கம் கருதுகின்றது.

அந்த விலை வரம்பு மிகவும் குறைவானது என்றும் அந்தப் பிரிவுக்குள் வரும் சில மாதிரிகள்- எம்சிஎம்சி என்ற மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் அடையாளம் கண்டுள்ளவை- இப்போது தயாரிக்கப்படுவதில்லை என்றும் இங் சொன்னார்.

ஆகவே எம்சிஎம்சி சில நிபந்தனைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். அந்த வரம்பு குறித்து குறை கூறும் செய்திகள் இணையத்தில் பரவலாக இடம் பெற்றன. அவ்வாறு குறை கூறியவர்களில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதினும் ஒருவர் ஆவார்.

ஆனால் எம்சிஎம்சி அந்த நடவடிக்கையை தற்காத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 500 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட விலையுள்ள கைத்தொலைபேசிகளை வாங்கும் சக்தியைக் கொண்டவர்களுக்கு கழிவு தேவை இல்லை என அது தெரிவித்தது.

என்றாலும் புத்ராஜெயா அந்தக் குறைகூறல்களுக்குச் செவி சாய்ப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அந்த விலை வரம்புக்கு ‘சற்றுக் கூடுதலான’ விலையுள்ள விவேகக் கைத் தொலைபேசிகளும் அந்தத் திட்டத்துக்குள் சேர்க்கப்படலாம் என தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறினார்.