கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷனுக்கு சொந்தமான நிறுவனத்தை ‘வாங்குவது’, சிலாங்கூர் மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லாவுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து நிலத்தை கொள்முதல் செய்வது ஆகியவை சம்பந்தப்பட்ட பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் ஆவணங்களைப் பார்ப்பதற்கு முன்னாள் இராணுவ வீரர் குழு ஒன்று அனுமதிக்கப்படவில்லை.
“நேரடி பங்குதாரர்கள் மட்டுமே அதனைப் பார்க்க முடியும்,” என பவுஸ்டெட் அதிகாரிகள் வாதாடியதாக அந்தக் குழுவுடன் சென்றிருந்த பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறினார்.
பக்காத்தானுடன் தொடர்புடைய அரசு சாரா அமைப்புக்களைச் சேர்ந்த 20 முன்னாள் இராணுவ அதிகாரிகள் கோலாலம்பூர் ஜாலான் ராஜா சூலானில் உள்ள பவுஸ்டெட் தலைமையகத்தில் இன்று பிற்பகல் ஒரு மணி வாக்கில் கூடினார்கள்.
பிற்பகல் மணி 2.30 வாக்கில் அவர்கள் பவுஸ்டெட்ட் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து சம்பந்தப்பட்ட பரிவத்தனைகள் தொடர்பான ஒப்பந்தங்களையும் ஆவணங்களையும் பார்க்க வேண்டும் எனக் கோரினர்.
அந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் அனைவரும் Lembaga Tabung Angkatan Tentera (LTAT) என்ற அமைப்புக்கு சந்தா செலுத்துகின்றவர்கள். பவுஸ்டெட் நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் பங்குகளைக் கொண்டுள்ள ஆயுதப்படைகள் பங்குக் காப்பு நிதியில் உறுப்பினர்கள் என்ற முறையில் அவர்கள் அங்கு சென்றனர்.
பவுஸ்டெட்-டுக்கும் Lembaga Tabung Angkatan Tenteraவுக்கும் இடையில் தொடர்பு இல்லை என பவுஸ்டெட் நிறுவன அதிகாரிகள் வலியுறுத்திய போது இரு தரப்புக்கும் இடையில் சிறிய வாக்குவாதம் மூண்டதாக ராபிஸி தெரிவித்தார்.
பவுஸ்டெட் நிறுவன அதிகாரிகள் அவை இரண்டும் தனித்தனி அமைப்புக்கள் என்று கூறி முன்னாள் இராணுவ அதிகாரிகள் கோரிய ஆவணங்களைக் காட்டுவதற்கு மறுத்து விட்டனர்.
கொல்லைப்புறமாக வாங்கும் நடவடிக்கை
வாக்குவாதத்தை நீட்டிக்க விரும்பாமல் அந்தக் குழு சிறிது நேரத்தில் புறப்பட்டு விட்டது.
என்றாலும் தாமும் அந்தக் குழு உறுப்பினர்களும் மீண்டும் திரும்பப் போவதாக குறிப்பிட்ட ராபிஸி முன்னாள் இராணுவ அதிகாரிகள் பங்குதாரர்கள் என்ற முறையில் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப் போவதாக தெரிவித்தார்.
“நான் பவுஸ்டெட் நிறுவனத்தில் ஒரு பங்கைக் கொள்முதல் செய்வேன். அதன் வழி நான் சிறுபான்மை பங்குதாரர் ஆவேன். நான் பெரும்பாலும் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் மீண்டும் செல்வேன்,” என அவர் சூளுரைத்தார்.
பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து பொது நிறுவனங்களும் தங்கள் பேரங்கள் பற்றிய விவரங்களை கோலாலம்பூர் பங்குச் சந்தைக்கும் பொது மக்களுக்கும் வெளியிட வேண்டும்.
பவுஸ்டெட் செய்து கொண்டுள்ள பேரம் சிறுபான்மை பங்குதாரர்களுக்கு பாதகமானது எனத் தாம் நம்புவதால் அதனைக் கண்காணிக்குமாறு தாம் சிறுபான்மை பங்குதாரர் கண்காணிப்புக் குழுவைக் கேட்டுக் கொள்ள எண்ணுவதாகவும் ராபிஸி சொன்னார்.
அந்த பேரம் இராணுவ வீரர்களும் முன்னாள் இராணுவ வீரர்களும் சந்தாதாரர்களாக உள்ள LTAT-க்குப் பாதகமனதாக இருந்தால் அதனை நிறுத்துமாறு பவுஸ்டெட் வாரியத்தில் உள்ள தங்கள் சகாக்களை பிகேஆர் தலைமையகத்தில் நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் அந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.