பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், தாம் முன்பு தெரிவித்த கருத்துக்குத் தேசிய தொலைக்காட்சியில் விளக்கம் அளிக்க அரசாங்கம் பச்சை விளக்குக் காண்பித்திருப்பதை அடுத்து கட்சியின் ஆன்மிக தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், கட்சிப் போராட்டத்தை விளக்க தமக்கும் நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
எந்த நேரத்திலும் தொலைக்காட்சியில் தோன்றி அது பற்றி விளக்கத் தயார் என்று அவர் கூறியதாக மலாய் நாளேடான சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.
“முகம்மது நபியை நம்பும் மக்களான நாம் உலகத்துக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும்…..பாஸ் அதன் நிலைப்பாட்டை மக்களுக்கு விளக்க அரசு வாய்ப்பளிக்க வேண்டும்”, என்று நிக் அசீஸ் கோத்தா பாருவில் கூறியதாக அச்செய்தித்தாள் அறிவித்துள்ளது.
1981-இல் தெரிவித்த கருத்துக்கு விளக்கமளிக்க அப்துல் ஹாடி முன்வந்திருப்பதை நிக் அசீஸ் வரவேற்றார். ஆனால், அவருடைய விளக்கம் நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
1981, ஏப்ரல் 7- இல் கோலா திரெங்கானுவில் ஒரு செராமாவில் உரையாற்றிய அப்துல் ஹாடி. அம்னோவை “காபீர்” என்றார்.அவர் அப்படிச் சொன்னது 1980-களில் சுவரொட்டிச் செய்தியாகவும் வலம் வந்தது.
அண்மையில் அம்னோ தலைவர்களும் அம்னோ ஆதரவு ஊடகங்களும் அவ்விவகாரத்தை மீண்டும் கிண்டிக் கிளறி அப்துல் ஹாடி அவ்வாறு உரைத்தது முஸ்லிம் சமுகத்தைப் பிளவுபடுத்தி விட்டது என்றும் அவர் தம் கருத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அப்துல் ஹாடி அது பற்றி தொலைக்காட்சியில்(ஆர்டிஎம்) விளக்கமளிக்கலாம் என்றார் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம்.
ஆனால், அதற்கு அப்துல் ஹாடி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும். அவருடன் சமய வல்லுனர்களும் அதில் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
ஹாடி தொலைக்காட்சியில் தோன்றி விளக்கமளிப்பதற்கு அம்னோ தலைவர்களிடையேயும் முஸ்லிம் அறிஞர்களிடையேயும் ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது.
அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் (வலம்) ஹாடியின் விளக்கம் முஸ்லிம்களை மேலும் பிளவுபடுத்தும் அபாயம் இருப்பதால் அதை ஒளிபரப்புக்குமுன் நன்கு வடிகட்ட வேண்டும் என்றார்.
அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் பாசிர் சாலாக் எம்பியுமான தாஜுடின் அப்துல் ரஹ்மான், மாற்றரசுக் கட்சியிடம் தாராளமாக நடந்துகொள்ளும் அரசைப் பாராட்டினார். அதே வேளை, அரசாங்க பிரதிநிதிகளும் அப்துல் ஹாடியுடன் சேர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றார். அப்துல் ஹாடி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தைத் தாக்கலாம் என்பதால் அதைத் தடுக்க அது அவசியம் என்றாரவர்.
அவரது கூற்றை பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜெயாவும் ஒப்புக்கொண்டார்.
ஆனால், ஜோகூர் முப்தி முகம்மட் தாஹ்ரிர் சம்சுடினும் பேராக் முப்தி ஹருஸ்ஸானி ஜக்கரியாவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்நிகழ்ச்சி அரசியல் கொள்கை விளக்க நிகழ்ச்சியாக மாறிவிடும் என்றவர்கள் குறிப்பிட்டனர்.