கேலிச் சித்திர ஒவியர் தமது அடுத்த புத்தகத்தில் அச்சகத்தின் பெயரை போடவில்லை

zunarகேலிச் சித்திர ஒவியரான ஸுனார், தமது அடுத்த கேலிச் சித்திரப் புத்தகத்தில் அச்சகத்தின் பெயரை சேர்க்கவில்லை என அறிவித்துள்ளார்.

எந்தப் புத்தகத்திலும் அச்சகத்தின் பெயர் இருக்க வேண்டும் என அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டம் கூறும் வேளையில் சிவில் ஒத்துழையாமை நடவடிக்கையாக அவர் அவ்வாறு செய்யப் போகிறார்.

“அது சட்டத்துக்கு எதிரானது எனக்குத் தெரியும். என்றாலும் அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களுக்கு எதிராகப் போராட வேண்டிய தார்மீக கடமை எனக்கு உள்ளது,” என ஸுனார் சொன்னார்.

“என்னுடைய நடவடிக்கைக்காக சட்ட அபாயத்தை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்,” என அவர் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

அதன் மீது அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஒராண்டு சிறைத்தண்டனை, 5,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அந்தச் சட்டத்தின் 11(2) பிரிவின் கீழ் வரும் அந்தத் தேவையை ஏற்கனவே பூர்த்தி செய்துள்ளதாகவும் அதனால் அச்சகத்தின் மீது அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சுல்கிப்லி எஸ்எம் அன்வார் உல்ஹாக் என்னும் இயற்பெயரைக் கொண்ட ஸுனார் தெரிவித்தார்.

தாம் 2009ல் வெளியிட்ட ‘Gedung Kartun’ 2010ல் வெளியிட்ட ‘Cartoon-o-Phobia’ ஆகியவற்றை அச்சிட்ட நிறுவனங்களும் அவற்றுள் அடங்கும் என்றார் அவர்.

அதனைத் தொடர்ந்து தமது முந்திய  comic 1 Moolaysia என்னும் புத்தகத்தை வெளியிடத் தயாராக உள்ள ‘துணிச்சலான’ அச்சகத்தைக் கண்டு பிடிக்கத் தமக்கு மூன்று மாதம் பிடித்தது என்றும் ஸுனார் சொன்னார்.

“அச்சகத்தின் பெயர் புத்தகத்தில் இருக்க வேண்டும் என்ற தேவையை அரசாங்கம்  ஒழுங்குபடுத்தும் நோக்கத்துக்காக பயன்படுத்தவில்லை என்பதும் பிஎன் அரசாங்கத்தைக் குறை கூறும் புத்தகங்களையும் அச்சிடப்பட்ட பொருட்களையும் ‘கொல்வதின்’ மூலம் பேச்சுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்பதும் அந்த நிகழ்வுகள் மூலம் உறுதியாகியுள்ளது.”

“அதன் காரணமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் என்னுடைய புதிய புத்தகமான Lawak & Lawanல் ( வேடிக்கையும் சண்டையும்) அச்சகத்தின் பெயரைப் போடவில்லை,” என்றார் அவர்.

“எனக்கு அதுவும் தெரியாது. அதன் விளைவாக அந்தப் புத்தகத்தை விற்பது கடினமாக இருக்கும். பொது இடங்களில் அதனை விற்க முடியாது. என்றாலும் நான் அந்த அபாயத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.”

108 பக்கங்களைக் கொண்ட அந்தக் கேலிச் சித்திரப் புத்தகம் அவருடைய இணையத் தளமான website http://zunarcartoonist.com வழி 25 ரிங்கிட்டுக்கு கிடைக்கும்.