WWW1 கார் தகடுக்கான ஏலத்துக்கு விண்ணப்பித்த போது ஜோகூர் சுல்தான் பொது நிதிகளைப் பயன்படுத்தினர் என்ற தோற்றத்தைத் தரும் வகையில் தமது டிவிட்டர் செய்தியை வெளியிட்டதின் மூலம் டிவி3 தம்மை அவமானப்படுத்தியுள்ளதாக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.
சுல்தான் பொது நிதிகளைப் பயன்படுத்தினார் என தாம் தமது டிவிட்டர் செய்தியில் குற்றம் சாட்டவே இல்லை என Sistem Television Malaysia Bhd மற்றும் இன்னொரு தரப்புக்கும் எதிராக தொடுத்துள்ள 50 மில்லியன் ரிங்கிட் வழக்கில் நிஜார் கூறினார்.
“என்னிடம் சரி பார்த்துக் கொள்ளாமல் பிரதிவாதி என் டிவிட்டர் செய்தியை தில்லுமுல்லு செய்து விட்டது. எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. என்னுடன் தொடர்பு கொள்ளாமல் அவை சொந்தமாக ஊகித்து ஒரு முடிவு செய்து கருத்தை தெரிவித்துள்ளன.”
“அவை எனக்கு கடுமையான அவமானத்தை ஏற்படுத்தி விட்டன. அது கடுமையான குற்றமாகும். ஏனெனில் சுல்தானை நோக்கி கூறப்பட்டவை என்ற எதிர்மறையான தோற்றத்தைத் தரும் வகையில் அவை ‘குற்றம் சாட்டப்பட்டவர்’, ‘பொது நிதிகள்’ போன்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளன. என்னுடைய டிவிட்டர் செய்தி அதன் தகவலுக்கு அடிப்படையாக இருக்கும் வேளையில் அதனைச் சரி பார்ப்பதற்கு பிரதிவாதிகள் என்னுடன் தொடர்பு கொள்ளவே இல்லை.”
சுல்தானைப் பொறுத்த வரையில் தாம் சுல்தானுக்கு எதிரானவர், அரசர் அமைப்பு முறைக்கு எதிரானவர் என்ற தவறான தோற்றத்தை கடந்த ஆண்டு மே மாதம் தனது Buletin Utama செய்தி அறிக்கையில் வழங்கிய பிரதிவாதியின் நடவடிக்கை தீய நோக்கம் கொண்டது என 55 வயதான நிஜார் மேலும் சொன்னார்.