நோ ஒமார்: தண்ணீர் இல்லாவிட்டால் சிலாங்கூர் பின் தங்கி விடும்

waterமலேசியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த தொழிலியல் மாநிலமான சிலாங்கூர் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கி வந்தால் எதிர்கால பொருளாதார விளைவுகள் மோசமாக இருக்கும் என  சிலாங்கூர் பிஎன் அஞ்சுகிறது.

“அந்த விஷயத்தை முறையாக தீர்க்கா விட்டால் சிலாங்கூர் தொடர்ந்து பின்னோக்கிச் செல்லும்,” என அதன் துணைத் தலைவரான நோ ஒமார் இன்று ஷா அலாமில் நிருபர்களிடம் கூறினார்.

“தண்ணீர் இல்லா விட்டால் முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள். தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் பல தொழிற்சாலைகளை நிர்மாணிக்க முடியாது. சிலாங்கூர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும் என்பதே அதன் அர்த்தமாகும்.”

உள்ளூர் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசினுடன் சென்ற அவர் நிருபர்களிடம் பேசினார்.

நீர் பற்றாக்குறைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு பக்காத்தான் வழி நடத்தும் சிலாங்கூர் அரசாங்கம் குறுகிய நோக்கத்துடன் தண்ணீர் விநியோகச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனத்துடனும் கூட்டரசு அரசாங்கத்துடனும் ஒத்துழைக்க மறுப்பதாகவும் நோ கூறிக் கொண்டார்.water1

அது பிஎன் அரசாங்கத்தின் தொலை நோக்கிலிருந்து மாறுபட்டது எனக் குறிப்பிட்ட அவர் 16 ஆண்டுகளுக்கு முன்பே லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அது திட்டமிட்டது என்றார்.

அந்தத் திட்டத்துக்கு மிகவும் கவனமாக இயங்கக் கூடிய ஜப்பானியர்கள் கூட ஆதரவு அளித்ததாக நோ சொல்லிக் கொண்டார்.

water2அண்டை மாநிலமான பாகாங்கிலிருந்து தண்ணீரை சுரங்கப் பாதை வழியாகக் கொண்டு வந்து லங்காட் 2 சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கும் அந்தத் திட்டத்துக்கு ஜப்பானிய மேம்பாட்டுப் பொருளகம் ஒன்று நிதி உதவி செய்கின்றது.

அண்மைய காலமாக பல கோலாலம்பூர் மாவட்டங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டதற்கு பழுதடைந்துள்ள தண்ணீர் இறைகுழாய்கள் காரணம் (அது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தொழில்நுட்ப திறமைக் குறைவைக் காட்டுகிறது) என சிலாங்கூர் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது பற்றியும் நோ-விடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், நீர் வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதே உண்மையான பிரச்னை என்றார்.

சாதனங்களும் பிரச்னையாக இருப்பதை ஒப்புக் கொண்ட அவர் அவை பிரச்னையில் பாதியே என்றும் சொன்னார்.

“இறைகுழாய்கள் மட்டும் காரணமல்ல. நீர் அளவும் குறைந்து வருவதும் ஒரு காரணமாகும்.”

13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க சிலாங்கூர் தண்ணீர் பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ளது.  பக்காத்தான் தலைமையிலான மாநில அரசாங்கத்தைக் குறை கூறுவதற்கு பிஎன் தண்ணீர் பிரச்னையையும் பயன்படுத்தி வருகின்றது.