பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தமது ‘Amanat Haji Hadi’ ( ஹாஜி ஹாடி செய்தியை) விளக்குவதற்குத் தேசியத் தொலைக்காட்சியில் நேரம் ஒதுக்க ஒரு வாரத்துக்கு முன்பு முன் வந்த தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் இப்போது அந்தத் திட்டத்தை முடக்கி வைத்துள்ளார்.
அவ்வாறு அந்தச் செய்தியை ஒளிபரப்புவது 2002ம் ஆண்டு ஜுலை 24ம் தேதி தேசிய பாத்வா மன்றத்தின் முஸாகாரா குழு வெளியிட்ட பாத்வா-வை மீறுவதாகும் என ராயிஸ் விளக்கியதாக இன்று உத்துசான் மலேசியா தகவல் வெளியிட்டுள்ளது.
1981ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி கோலா திரங்கானுவில் நடந்த ஒரு செராமாவில் அம்னோ ‘சமய நம்பிக்கையற்றது’ என அப்துல் ஹாடி வழங்கிய செய்தி இஸ்லாத்துக்கு முரணானது என அந்த பாத்வா கூறியது.
“ஆகவே தேசிய பாத்வா மன்றத்தின் முஸாகாரா குழு வெளியிட்ட பாத்வா-வுக்கு மலேசிய வானொலி தொலைக்காட்சி கட்டுப்படுள்ளது.”
“அப்துல் ஹாடி அந்தச் செய்தியை மீட்டுக் கொள்ளத் தயாராக இருந்தால் மட்டுமே கருத்தரங்கு நடத்தப்பட முடியும்,” என ராயிஸ் தெரிவித்ததாகவும் உத்துசான் செய்தி குறிப்பிட்டது.
32 ஆண்டுகளுக்கு முன்பு அப்துல் ஹாடி வழங்கிய அந்தச் செய்தி முஸ்லிம் சமூகத்தைப் பிளவுபடுத்தி விட்டதால் அதனை அவர் மீட்டுக் கொள்ள வேண்டும் என அம்னோ தலைவர்களும் அம்னோ ஆதரவு ஊடகங்களும் அதற்கு புத்துயிரூட்டிய பின்னர் அந்தச் செய்தி மீது மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
உள்ளடக்கம் பொருத்தமானதாக இருந்தால் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஆர்டிஎம்-ல் அப்துல் ஹாடி விளக்கலாம் என அவரது வேண்டுகோளுக்குப் பதில் அளித்த ராயிஸ் கூறினார்.
என்றாலும் அப்துல் ஹாடி ஆர்டிஎம்-க்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த கருத்தரங்கில் சமய அறிஞர்களும் கலந்து கொள்வர் என்றும் ராயிஸ் தெரிவித்திருந்தார்.
அந்த யோசனை குறித்து அம்னோ தலைவர்களும் முஸ்லிம் அறிஞர்களும் பல வகையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.