ராபிஸி: நான் இனிமேல் தீபக்கைச் சந்திப்பேன்

Rafiziவர்த்தகரான தீபக் ஜெய்கிஷன், தமக்கு அரசியல் ஆதரவு இல்லை என நேற்று வருத்தத்துடன் நிருபர்களிடம் கூறியிருப்பதைத் தொடர்ந்து தாம் இன்று அவரை சந்திக்கப் போவதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குப் பாதகமான ஆதாரங்கள்” பல தீபக்-கிடம் இருப்பதாகத் தாம் நம்பினாலும்  பிகேஆர் அவருக்கு அணுக்கமாக இருப்பதைக் காண தாம் முன்பு விரும்பவில்லை என ராபிஸி சொன்னார்.

“உண்மை நிலை உறுதி செய்யப்படும் வரையில் ( தீபக் சுயமாக இயங்குகிறார்)  தீபக்குடன் மிக அணுக்கமாகவும் நட்புறவாகவும் பிகேஆர் காணப்பட்டால் உண்மையைக் கண்டு பிடிப்பதற்கான முழு வாய்ப்பையும் அம்னோ திசை திருப்பி நாங்கள் அதற்குப் பின்னணியில் இருப்பதாகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தும்,” என ராபிஸி இன்று நிருபர்களிடம் கூறினார்.

தீபக் சொந்தமாக இயங்குகிறார் என்பது அரசியல் ஆதரவு கோரி நேற்று நடத்திய நிருபர்கள் சந்திப்பிலிருந்து தெளிவாகி விட்டது என அவர் மேலும் கூறினார். அதனால் பிகேஆர் அவருடன் எந்த நேரத்திலும் விவாதம் நடத்தியதில்லை என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

என்றாலும் பிரதமருடைய துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு ஆபரணங்களைத் தீபக்கின் கம்பள வணிக நிறுவனம் வாங்கியதாக கூறப்படுவதைக் காட்டும் ஆவணங்கள் உண்மையானவை என்றும் அவை தீபக்-கிடமிருந்து வந்தவை என்றும் ராபிஸி வலியுறுத்தினார்.