மலேசிய வானொலி தொலைக்காட்சி நேற்றிரவு ஒளிபரப்பிய ‘Bicara Rakyat’ என்னும் மக்கள் உரையாடல் நிகழ்வில் பேசிய ஒருவர் ‘Amanat Haji Hadi’ ( அப்துல் ஹாடியின் செய்தி ) மீது எழுந்துள்ள பிரச்னையைத் தீர்ப்பதற்கு ரகசியமாக முஸாகாரா ( விவாதம் ) நடைபெறலாம் என யோசனை கூறியிருக்கிறார்.
“பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்-கும் மற்றும் பல பாஸ் தலைவர்களும் முப்திக்கள், இஸ்லாமிய கல்வியாளர்கள் போன்ற அரசியல் சார்பற்ற பிரமுகர்கள் அந்த விஷயத்தை விவாதிக்கலாம் என நான் யோசனை கூறுகிறேன்.”
“அந்த முஸாகாரா வழி பிரச்னை அரசியலாக்கப்பட முடியாது. உம்மா-வின் பிரச்னைகளை மட்டுமே விவாதிக்க இயலும்,” என பாஸ்லான் என அடையாளம் கூறப்பட்ட அந்தப் பார்வையாளர் சொன்னார்.
டிவி1ல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியை ஆர்டிஎம் அறிவிப்பாளர் சயீட் முனாவார் சயீட் முஸ்தார் வழி நடத்தினார். ஜாத்தி தலைவர் டாக்டர் ஹசான் அலி, முன்னாள் பாஸ் உறுப்பினர் தஹாருடின் யாக்கோப் ஆகியோர் அந்த நிகழ்வில் பேசினார்கள்.
முஸ்லிம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு விடுத்த அறிக்கையை அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நிருபர்களைச் சந்தித்த ஹசான் குறை கூறினார்.
மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட் சாபு-வின் அறிக்கை பாஸ் கட்சியின் Syura மன்றத்தின் முடிவுக்கு முரணாக உள்ளது என்றார் அவர்.
பெர்னாமா