நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு மாமன்னருக்கு மாஹ்புஸ் வேண்டுகோள்

deepakசத்தியப் பிரமாணம் மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில் தாம் ஆற்றிய பங்கு குறித்து தீபக் ஜெய்கிஷன் பல தகவல்களை வெளியிட்டுள்ளதைத் தொடந்து எழுந்துள்ள சந்தேகங்களை மாட்சிமை தங்கிய மாமன்னருடைய அரசாங்கமும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் போக்கிக் கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை யாங் டி பெர்துவான் அகோங் கூட்ட வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வேண்டுகோளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றை தாம் சமர்பிப்பதற்கு நேரம் தருமாறு அகோங் துவாங்கு அப்துல் ஹலிமிடம் தாம் வேண்டிக் கொள்ளப் போவதாகவும் மாஹ்புஸ் சொன்னார்.

“அகோங் எனக்கு பேட்டி அளிக்க இணங்கி பிப்ரவரி 15ம் தேதிக்கு முன்னதாக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்  நிகழ்வதற்கு அனுமதி அளிப்பார் என நான் நம்புகிறேன். ஏனெனில் அதற்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என நான் அஞ்சுகிறேன்.”

“தீபக் ஏற்பாட்டில் நிகழ்ந்ததாக கூறப்படும் பி பாலசுப்ரமணியம் வழங்கிய முதலாவது சத்தியப் பிரமாணம் மீட்டுக் கொள்ளப்படுவதில் தமது இளைய சகோதரர் ஆற்றிய பங்கை நஜிப் விளக்குவது அவசியம் என நான் கருதுகிறேன்,” என்றார் அவர்.deepak1

தீபக் பல தகவல்களை அம்பலப்படுத்திய பின்னர் அரசாங்கமோ அல்லது நஜிப்போ அவற்றின் மீது ஏதும் சொல்லாமல் இருப்பது தமக்கு வியப்பை அளித்துள்ளதாக அந்த பொக்கோக் செனா எம்பி குறிப்பிட்டார்.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை இல்லை என்றால் நஜிப் தீபக் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என மாஹ்புஸ் கருதுகிறார்.

அவர் மௌனமாக இருப்பது மாட்சிமை தங்கிய மாமன்னருடைய அரசாங்கத்தின் நற்பெயரையும்  அகோங்கின் நற்பெயரையும் பாதிக்கும் என்றும் அவர் சொன்னார்.