போலீசார் சனிக்கிழமை பேரணிக்கு சிறப்பு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவர்

Rallyவரும் சனிக்கிழமை எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யட் ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு செய்திகளை சேகரிக்கச் செல்லும் நிருபர்கள் போலீசார் வெளியிடும் சிறப்பு அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும்.

நிருபர்களை எளிதாக அடையாளம் காண்பதற்கு அந்த சிறப்பு அட்டைகள் உதவும் எனக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ்காரர்கள் நிருபர்களை அடித்த சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்காக முன்னுதாரணம் இல்லாத அந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அந்தப் பேரணிக்கு செய்திகளைத் திரட்டச் செல்லும் நிருபர்கள் பட்டியலை வழங்குமாறு கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்திலிருந்து நேற்று பல மலேசியாகினி நிருபர்களுக்குத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தன.

தொலைபேசி எண்கள், மை கார்டு எண்கள் உட்பட பல தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய பட்டியல் நாளைக்குள் கொடுக்கப்பட வேண்டும்.

நிருபர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தேசிய போலீஸ் படைத் தலைவர் செயலகத்தைச் சேர்ந்தப் போலீஸ் பொது உறவுப் பிரிவு அதிகாரி ஏசிபி ராம்லி முகமட் யூசோப் கூறினார்.

“கடந்த காலத்தில் நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைக் காண நாங்கள் விரும்பவில்லை,” என பெர்சே 3.0 பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.

மக்கள் எழுச்சிப் பேரணி என அழைக்கப்படும் அந்தப் பேரணியின் போது பங்கேற்பாளர்கள் கோலாலம்பூர் சாலைகளில் கூடத் தொடங்கினால் ஒடுக்குமுறை பயன்படுத்தப்படக் கூடிய வாய்ப்பை போலீஸ் நிராகரிக்கவில்லை என்பதை அந்த புதிய நடவடிக்கை காட்டுகின்றது.

பேரணியை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் வரலாற்று சிறப்புமிக்க மெர்தேக்கா அரங்கத்தை பெறுவதற்கு சமர்பித்த விண்ணப்பத்துக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை அல்ல

முழு நேரப் பத்திரிக்கையாளர்கள் அரசாங்க அங்கீகாரம் பெற்ற கார்டுகளை ஏற்கனவே வைத்திருக்கும் வேளையில் போலீஸ் ஏன் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை எடுக்கிறது என்றும் அவரிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், போலீஸ் வழங்கும் அட்டைகளை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும் என்றார்.Rally1

“சில வேளைகளில் ஊடக அடையாள அட்டைகள் எங்களுக்கு பழக்கமில்லால் இருக்கலாம். எங்கள் அனுமதியை வைத்திருக்கின்றவர்கள் நிருபர்கள் என்றும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் எங்கள் அதிகாரிகளுக்குச் சொல்வது என் வேலையாகும்.”

பேரணியின் போது நிருபர்கள் தங்களது ஊடக அமைப்புக்களை தெளிவாகக் காட்டும் மேல் சட்டைகளை அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார்.