அல்லாஹ், மதம் மாற்றம் தொடர்பான குறுஞ்செய்திகள் பொய் என மாட் சாபு சொல்கிறார்

kiniபாஹாசா மலேசியா பைபிள் பதிப்புக்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குத் தாம்  ஆதரவளிப்பதாகவும் மலாய்க்காரர்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றம் செய்யப்படுவதை ஏற்றுக்  கொள்வதாகவும் கூறிக் கொள்ளும் குறுஞ்செய்திகள் பொய்யானவை என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறியிருக்கிறார்.

“நான் அவ்வாறு சொல்லவே இல்லை. நான் அது போன்று தெரிவிக்கவும் இல்லை. அந்தக் குறுஞ்செய்தி பொய்யானது. 2010ம் ஆண்டு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் -டும் அறிவித்த நிலையே என்னுடைய நிலையுமாகும்.”

“எதுவும் மாறவில்லை. எந்தப் புதிய கருத்தும் இல்லை. ஆகவே அந்தக் குறுஞ்செய்தி சரியானது அல்ல,” என நேற்று மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அவர் சொன்னார்.

சமய விஷயங்களில் தமக்கு நிபுணத்துவம் இல்லை என்பதைக் குறிப்பிட்ட மாட் சாபு என்றும் அறியப்படும் முகமட், அந்த விவகாரம் மீது அதிகமான அறிவாற்றல் உள்ளவர்களைக் குறிப்பாக இரண்டு உயர் நிலை பாஸ் தலைவர்களுடைய கருத்துக்களைப் பின்பற்றி வருவதாக தெரிவித்தார்.

“அல்லாஹ்” விவகாரம் மீது மாட் சாபு விடுத்ததாக கூறப்படும் ஒர் அறிக்கையை மலேசியாகினி செய்தி இணையத் தளத்துடன் தொடர்புபடுத்தி பல மலேசியாகினி நிருபர்களுக்கு கிடைத்த குறுஞ்செய்தி பற்றி கருத்துரைக்குமாறு அவரிடம் முன்னதாக கேட்டுக் கொள்ளப்பட்டது.kini1

அந்தக் குறுஞ்செய்தி இவ்வாறு சொல்கிறது: ‘மாட் சாபு பைபிளில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுவதற்கு ஒப்புக் கொள்கிறார். மலாய்க்காரர்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதையும் ஏற்றுக் கொள்கிறார்.’

முகமட்டின் நிலை மீது ஆயர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் மலேசியாகினியில் வெளியான ஒரு கட்டுரைக்கான இணைப்பும் அந்தக் குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்களுடைய வாக்குகளைக் கவரும் பொருட்டு அவர்களுடைய உணர்வுகளுடன் விளையாடும் நோக்கத்தை அந்த குறுஞ்செய்தி கொண்டுள்ளதாக அவர் கருதுகிறார்.

கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்க முடியாது என்றும் குழப்பத்தை ஏற்படுத்தவும் எல்லாத் தரப்புக்களும் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்கு மலிவான அரசியல் தந்திரமாகவும் அந்த சொல்லைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது  என்றும்  2010ம் ஆண்டு ஜனவரி மாதம் பாஸ் கட்சி அறிவித்தது.