ஹபிபி மரியாதைக்குரிய தலைவர் என இப்போது ஜைனுடின் புகழ்கிறார்

zainuddinமுன்னாள் இந்தோனிசிய அதிபர் பிஜே ஹபிபி-யை ஒரு மாதத்திற்கு முன்பு அவரது நாட்டின் துரோகி என வருணித்த முன்னாள் மலேசியத் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின் இப்போது தமது பல்லவியை மாற்றிக் கொண்டு ஹபிபி, மக்கள் உயர்வாகப் போற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என புகழாரம் சூட்டியிருக்கிறார்.

உத்துசான் மலேசியாவில் இன்று வெளியான நீண்ட காட்டுரையில் ஜைனுடின் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தார். ஆனால் ஹபிபி குறித்து கடைசி இரண்டு பத்திகளில் ஹபிபியை பாராட்டி எழுதியுள்ளார்.

“இந்தோனிசியாவில் முன்னாள் அதிபர் ஹபிபி இன்னும் அதிக நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்கிறார். அவர் தெரு நடிகர் அல்ல. அதனால் தான் நான் அவரை அன்வாருக்கு இணையாக எழுதிய போது இந்தோனிசிய மக்கள் ஆத்திரமடைந்தனர்.”

“ஹபிபி இன்னும் மதிக்கப்படும் தலைவர். அன்வாரைப் போன்று சகதியில் புரளுவதில்லை,” என ஜைனுடின் எழுதியுள்ளார்.

ஹபிபி கிழக்குத் தீமோர் இந்தோனிசியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு வழி வகுத்த பொது வாக்கெடுப்புக்கு மேற்கத்திய நாடுகள் தொடுத்த நெருக்குதலுக்கு அடிபணிந்த நாட்டுத் துரோகி என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி உத்துசானில் வெளியான கட்டுரை ஒன்றில் ஜைனுடின் கூறியிருந்தார்.

ஹிபிபியும் சிலாங்கூரில் அவரை சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு அழைத்திருந்த அன்வாரும் “ஏகாதிபத்தியத்தின் நாய்கள்” என்றும் ஜைனுடின் வருணித்திருந்தார்.

அந்த அப்பட்டமான தாக்குதலை நடப்பு இந்தோனிசிய அதிபர் சுசிலோ பம்பாங் யூதயோனோ கண்டித்ததுடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சந்தித்த போது அது குறித்துக் கவலையும் தெரிவித்தார்.

ஆனால் ஜைனுடின் மன்னிப்புக் கேட்க மறுத்தததுடன் தமது கருத்தை முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நூரும் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் சொன்னார்.