‘அந்த 207 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு பற்றி விளக்குங்கள்’

railஇரண்டாம் உலகப் போரின் போது சயாமுக்கும் பர்மாவுக்கும் இடையில் அமைக்கப்பட்ட மரண ரயில்வே என அழைக்கப்பட்ட ரயில் தண்டாவளத்தைப் போடுவதற்குக் கட்டாயத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்ட 30,000 மலாயா மக்களில் உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் ஜப்பானிய அரசாங்கம் இழப்பீடாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 207 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு பற்றி பிஎன் அரசாங்கம் விளக்க வேண்டும் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார்.

1990களில் தாம் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அந்தப் பணம் மாற்றி விடப்படவில்லை என்றும் அவர் கூறிக் கொண்டார்.

“அந்தப் பணம் கருவூலத்துக்கு கொடுக்கப்படவில்லை என நான் சொல்லியிருக்கிறேன். நடப்பு பிஎன் அரசாங்கம் அந்த 207 பில்லியன் ரிங்கிட் பற்றி அமைதியாக இருக்கக் கூடாது.”

“190 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகை கள்ளத்தனமாக நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஜிஎப்ஐ என்ற உலக நிதி நேர்மைக் குழுமம் தகவல் வெளியிட்ட பின்னர் அந்த இழப்பீடு குறித்த செய்திகள் கசிந்துள்ளன. அந்த விஷயம் மீது பிரதமரோ கருவூலமோ எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. நாட்டின் நிதி விவகாரங்கள் அலட்சியம் செய்யப்படுகின்றன என்பதற்கு இது அப்பட்டமான எடுத்துக்காட்டு ஆகும்,” என்றார் அன்வார்.rail1

1990ம் ஆண்டுகளில் மலேசிய அரசாங்கத்துக்கு ஜப்பானிய அரசாங்கம் 207 பில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக கொடுத்துள்ளதாக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் வெளியிட்டுள்ள தகவல் பற்றி அன்வார் கருத்துரைத்தார்.

அந்தப் பணம் இன்னும் அரசாங்கத்திடம் இருக்கிறதா அல்லது மரண ரயில்வேயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டதா என்பது தெரியவில்லை என்றும் நிஜார் சொல்லியிருந்தார்.

“உயிர் பிழைத்த 30,000 பேர் மலேசியாவுக்குத் திரும்பி வந்தனர். அவர்களில் சிலர் இறந்து விட்டனர். அவர்களுடைய வாரிசுகள் ‘சயாம்- பர்மா 1942-1946 ரயில்வே கட்டுமானத்தின் முன்னாள் தொழிலாளர்கள், அவர்களது வாரிசுகள் சங்கத்தை’ அமைத்துள்ளனர் என நிஜார் சொன்னதாக ஹாராக்கா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.