நெகிரி செம்பிலான் சொற்பொழிவுக் கூட்டம் ஒன்றில் சலசலப்பு

நேற்றிரவு நெகிரி செம்பிலான் ரெம்பாவில் எதிர்த்தரப்பு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த இடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற முன்னாள் இராணுவ வீரர்களின் குழு ஒன்றை பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

தேசிய வீரர்களை கௌரவிக்கும் இயக்கம் ( Gerakan Memartabatkan Pejuang Negara ) எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் அமைப்பைச் சார்ந்த 200 பேர், கம்போங் புலாவ் பிந்தோங்கானில் சொற்பொழிவு நிகழ்ந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற போது சலசலப்பு ஏற்பட்டது.

அந்த நிகழ்வில் முக்கிய பேச்சாளரான பாஸ் துணைத் தலைவர் முகமட்  சாபு-வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய அந்தக் குழு விரும்பியதாக சினார் ஹரியான் தகவல் தெரிவித்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தை அணுகிய போது பக்காத்தான் ஆதரவாளர்கள் அவர்களை எதிர்கொண்டு விரட்ட முயன்றனர்.

“இங்கு வந்து எங்கள் நிகழ்வுக்கு இடையூறு செய்ய வேண்டாம்!” என பக்காத்தான் ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர்.”

இரவு மணி 9.30 வாக்கில் நிலைமை கடுமையாகியது. வாக்குவாதங்கள் முற்றின. இரு தரப்புக்களையும் சார்ந்த தனி நபர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு நிலைமை கடுமையாக இருந்தது. பின்னர் ரெம்பாவ் பிகேஆர் தொகுதித் தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரென் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமரசத் தீர்வு கண்டார்.

ஆட்சேபக் குறிப்பைக் கொடுப்பதற்குத் தாங்கள் மாட் சாபுவை அணுகுவதற்கு தாங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் பிடிவாதமாக இருந்தனர்.

இரண்டு வாரங்களில் இரண்டாவது ஆர்ப்பாட்டம்

இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களில் இருவர், சொற்பொழிவு நிகழ்ந்த இடத்துக்குள் சென்று குறிப்பை கொடுப்பதற்கு அனுமதிக்க இறுதியில் பக்காத்தான் ஆதரவாளர்கள் ஒப்புக் கொண்டனர்.

ஆகஸ்ட் 21ம் தேதி பினாங்கில் மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட் சாபு ஆற்றிய உரை குறித்து அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் இராணுவத்தினரைத் தாங்கள் பிரதிநிதிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறிக் கொண்டனர்.

அந்த உரையில் மாட் சாபு, 1950ம் ஆண்டு புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தலைமறைவுத் தாக்குதலில் இடச்சாரி கிளர்ச்சிக்காரரான முகமட் இந்ராவின் பங்கு குறித்த அதிகாரத்துவ குறிப்புக்கள் பற்றி கேள்வி எழுப்பினார்.

அந்த உரை தொடர்பில் மாட் சாபு மீது கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டு கடந்த மாதம் சுமத்தப்பட்டது.

அதற்கு பின்னர் செப்டம்பர் 24ம் தேதி சிரம்பான் அம்பாங்கானில் மாட் சாபு பேசிய கூட்டம் ஒன்றை பெர்க்காசா ஆதரவாளர்கள் சீர்குலைக்க முயன்றனர்.

அப்போது நிகழ்ந்த கைகலப்பில் இரண்டு பாஸ் ஆதரவாளர்களும் பெர்க்காசா ஆதரவாளர் ஒருவரும் காயமடைந்தனர்.

நெகிரி செம்பிலானில் மாட் சாபு கலந்து கொள்ளும் கூட்டங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக பெர்க்காசா ஏற்கனவே எச்சரித்துள்ளது.