FGV என்ற Felda Global Venture பங்கு விலைகளை உயர்த்தும் நோக்கத்துடன் பெல்டா அந்தப் பங்குகளைத் திறந்த சந்தையில் வாங்குகின்றது.
Felda Asset Holdings Company என்னும் தனது துணை நிறுவனம் வழியாக பெல்டா 29 மில்லியன் பங்குகளை டிசம்பர் மாதத்தில் மட்டும் வாங்கியுள்ளதாக புர்சா மலேசியா பங்குச் சந்தைக்குத் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் காட்டுகின்றன.
அந்த எண்ணிக்கை அந்த மாதம் பரிவர்த்தனை செய்யப்பட்ட 83.81 மில்லியன் FGV பங்குகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலானதாகும்.
FGV பங்குகளை வாங்கும் நடவடிக்கையை பெல்டா அக்டோபர் மாதம் தொடங்கியதாகத் தெரிகிறது. அந்த மாதம் அது 711,100 பங்குகளை வாங்கியது. நவம்பர் மாதம் அது திறந்த சந்தையில் வாங்கிய FGV பங்கு எண்ணிக்கை 8.43 மில்லியனாக உயர்ந்தது.
அவ்வாறு வாங்கியதின் விளைவாக FGV-யில் பெல்டாவின் மறைமுகமான பங்கு அளவு 17 விழுக்காட்டிலிருந்து 18.04 விழுக்காடாக உயர்ந்தது. ஏற்கனவே அதற்கு 20 விழுக்காடு நேரடிப் பங்கு உள்ளது.
அதே வேளையில் ஊழியர் சேம நிதி வாரியம் டிசம்பர் மாதம் 18.6 மில்லியன் FGV பங்குகளை விற்பனை செய்தது. முக்கியமான முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த காலக் கெடு முந்திய மாத இறுதியில் முடிவுக்கு வந்ததும் அவை விற்கப்பட்டுள்ளன.
FGV பங்கு விலைகளை உயர்த்துவதற்கு ஊழியர் சேம நிதி ( இபிஎப் )பயன்படுத்தப்படுவதாக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார்.
அதே மாதத்தில் இபிஎப் 3.86 மில்லியன் பங்குகளை வாங்கியுள்ளது. அக்டோபரிலும் நவம்பரிலும் அது 12.45 மில்லியன் FGV பங்குகளை அது வாங்கியது.
டிசம்பர் மாதம் KWAP என்ற ஒய்வுக்கால நிதி அமைப்பும் மொத்தம் 597,900 பங்குகளை விற்றது.
2013ம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் FGV பங்கு விலைகள் சரிந்து வருகின்றன. தொடக்கத்தில் அந்தப் பங்குகள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட போது 4 ரிங்கிட் 55 சென் என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நேற்று அதன் விலை 4 ரிங்கிட் 60 சென்-ஆக முடிந்தது.