சீனப் புத்தாண்டுக் கலை நிகழ்ச்சிக்கு கெடா அரசு பச்சைக் கொடி காண்பித்தது

1kedahபிப்ரவரி 15-இல், அலோர் ஸ்டாரில் ‘1மலேசியா சீனப் புத்தாண்டு’ கலாச்சார நிகழ்வுக்கு கெடா அரசு பச்சைக் கொடி காண்பித்து விட்டது.

ஆனால், ஏற்பாடாளர்கள் நிகழ்வில் பங்கேற்கும் கலைஞர்கள் கண்ணியமாக உடை அணிந்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் கூறினார்.

“அந்நிகழ்வில் பங்கேற்கும் ஒவ்வொரு கலைஞரும், ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, கவர்ச்சியாக அல்லாமல் பண்பார்ந்த உடைகளை அணிந்திருக்க வேண்டும்”, என்று அசிசான் குறிப்பிட்டார்.

மாநில அரசின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் அந்நிகழ்வு தடை செய்யப்படும் என்ற ஊடகச் செய்திகள் குறித்து விளக்கமளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

1kedah hamdanசெய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றறிக்கையில் மாநில அரசில் சுகாதாரம், விளையாட்டு, இளைஞர், பண்பாடு, கலைகள், பாரம்பரியம், உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக் குழு உறுப்பினர், ஹம்டான் முகம்மட் காலிப் (இடம்) விதிமுறைகள் நிலைமைக்கேற்ப “மாற்றப்படலாம்” என்றார்.

“பக்காத்தான் ரக்யாட் அரசு ஆணவம் கொண்ட அரசல்ல. தப்பு நடந்திருந்தால் அதை ஒப்புக்கொள்ள அது அஞ்சாது. நாங்கள் உண்மையான ஜனநாயகவாதிகள்”, என்றாரவர்.

இதற்குமுன் கலாச்சார நிகழ்வுக்கான விதிமுறைகளைப் பல தரப்பினரும் சாடி இருந்தனர். விதிமுறைகள் கடுமையாக இருப்பதாகவும் வயதுக்கு வந்த பெண்கள் அதில் பங்கேற்பது தடை செய்யப்பட்டிருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

புதிய விதிமுறைகள், தவறுகள் அடையாளம் காணப்பட்டு திருத்திக்கொள்ளப்பட்டிருப்பதாக  கூறின. “சிட்டி பிளாசாவும் இளைஞர் இயக்கமும் (கெடா கிளை) நிபந்தனைகளின்றி அந்நிகழ்வை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடைகள் அச்சமூகத்தின் பண்பாட்டுக்கேற்ப இருத்தல் வேண்டும்.”, என்றவை கூறின.

பொருத்தமற்ற நிகச்சிகளைக் கட்டுப்படுத்தவே விதிமுறைகள்

இதனிடையே, ஹம்டானின் அலுவலகம் விடுத்த அறிக்கை பொருத்தமற்ற நிகழ்ச்சிகளால் குறிப்பாக மலாய் முஸ்லிம் இளைஞர்களிடையே  சமூகப் பிரச்னைகள் உண்டாகலாம் என்பதால்தான் அவற்றை கட்டுப்படுத்த விதிமுறைகள் உள்ளன என்று கூறியது.

“ஆனால், சீனர்கள், இந்தியர்கள், தாய்லாந்துக்காரர்கள் நடத்தும் நிகழ்வுகளுக்கு விதிமுறைகள் தளர்த்தப்படும்”.

1மலேசியா சீனப் புத்தாண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விதிமுறைகள் குறித்து முதலில் ஹம்டானின் அலுவலகத்துடன் விவாதித்திருந்தால் விவகாரம் இந்த அளவுக்குச் சென்றிருக்காது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் விவகாரத்தை மசீச அதிகாரிகளிடம் கொண்டு சென்றதாக தெரிகிறது.

“வழக்கமாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஹம்டானுடன் பேசுவார்கள். தேவைக்கு ஏற்ப விதிமுறைகள் தளர்த்தப்படும்”, என்று ஹம்டான் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.