அந்நியர்கள் குடிமக்களாக்கப்பட்டது மீது சபா அரச விசாரணை ஆணையத்தில் (ஆர்சிஐ) தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் அதிர்ச்சி அளித்தாலும் தேர்தல்களை தள்ளி வைப்பதற்கு ஆர்சிஐ சட்டப்பூர்வ காரணமாக இருக்க முடியாது.
என்றாலும் 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் வாக்காளர்களும் அரசியல் கட்சிகளும் தேர்தல் மனு வழியாக அந்த முடிவுகளை எதிர்த்து வழக்குப் போடலாம்.
அந்த நிலைமை ஏற்படாமல் தடுக்க இப்போது தொடக்கம் 13வது பொதுத் தேர்தல் வரை தேர்தல் ஆணையம் (இசி) அதனை விசாரிக்கலாம் அல்லது விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளலாம்.
அதற்குப் பின்னர் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தலாம் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ கூறினார்.
“சட்டத்தின் அடிப்படையில் ஆர்சிஐ தேர்தலைத் தள்ளி வைக்க சட்டப்பூர்வ காரணமாக முடியாது,” என்றார் அவர்.
கூட்டரசு அரசமைப்பின் 55வது பிரிவிலும் சபா மாநில அரசமைப்பில் 21வது பிரிவிலும் பொதுத் தேர்தலுக்கான காலக் கெடு குறித்த சட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் லிம் தெரிவித்தார்.
கூட்டரசு, சபா மாநில அரசமைப்புக்கள், நாடாளுமன்றத்தை அல்லது மாநிலச் சட்டமன்றத்தை அவற்றின் முதலாவது கூட்டம் தொடங்கிய நாளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்துக்குப் பின்னர் யாங் டி பெர்துவான் அகோங் அல்லது சபாவைப் பொறுத்த வரை யாங் டி பெர்துவா நெகிரி தள்ளி வைக்கலாம் அல்லது கலைக்கலாம். பின்னர் அது கலைக்கப்பட்டு விட்டதாக கருதப்படும்.
அதனைத் தொடர்ந்து தேர்தல்கள் 60 நாட்களுக்குள் நடைபெற வேண்டும். சபாவில் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட 120 நாட்களுக்குள் புதிய சட்டமன்றம் கூட வேண்டும் என சபா அரசமைப்பு சொல்கிறது.
“ஆகவே கலைக்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்கு அப்பால் பொதுத் தேர்தலைத் தள்ளிப் போட முடியாது என்பதே அதன் அர்த்தமாகும்,” என்றார் லிம்.
ஆர்சிஐ விசாரணையின் போது தெரிவிக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் மீது இசி சுயமாகவே புலனாய்வுகளை தொடங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த ஆர்சிஐ முடியும் வரை அது காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இசி புலனாய்வு ஆர்சிஐ விசாரணையை அவமானப்படுத்துதாக கருதமுடியாது என்றும் லிம் சொன்னார்.