உத்துசான் அன்வார் மீது அவதூறு கூறியுள்ளது என நீதிமன்றம் முடிவு

anwarஎதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறு கூறியதற்கு உத்துசான் மிலாயு (எம்) சென் பெர்ஹாட்டும் அதன் தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் இஷாக்கும் பொறுப்பேற்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று முடிவு செய்துள்ளது.

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா கடந்த ஆண்டு ஜுன் 17ம் தேதி முதல் பக்கத்தில் காணப்பட்ட செய்தியும் பத்தாவது பக்கத்தில் காணப்பட்ட கட்டுரையும் அன்வாருடைய தோற்றத்துக்குக் களங்கம் விளைவித்துள்ளது என்றும் அந்த அரசியல்வாதி சிறுமைப்படுத்தப்படுவதற்கும் இழிவுபடுத்தப்படுவதற்கும் வழி வகுத்து விட்டது என்றும் நீதிபதி விடி சிங்கம் தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.

உத்துசான் பொறுப்புள்ள இதழியல் நடைமுறைகளைப் பின்பற்றத் தவறி விட்டதாகவும் அவர் சாடினார்.

“அன்வார் பிபிசி-க்கு அளித்த பேட்டி அவர் ஒரினச் சேர்க்கை திருநங்கை நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிய போதிலும் அந்த நாளேடு அன்வார் அறிக்கையை அந்த நாளேடு பொருத்தமில்லாத இடத்திலிருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளது.”

“உத்துசான் வெளியிட்ட கட்டுரை சரியானது அல்ல. பொருத்தமில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைச் சமரசம் செய்து கொள்ள முடியாது.”

“அன்வார் அதனை அங்கீகரிக்கிறார் எனச் சொல்வதே அந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அன்வாருடைய வழக்குரைஞர்கள் கட்டுரை வெளியான ஒரு வாரத்தில் சட்ட நோட்டீஸ் அனுப்பிய போது பிரதிவாதிகள் தொழில் ரீதியாக திருத்தத்தை வெளியிடத் தவறியதோடு அந்த நோட்டீஸையும் அலட்சியம் செய்துள்ளனர்,” என நீதிபதி மேலும் கூறினார்.