உள்நாட்டுப் பல்கலைக்கழகக் கல்வியாளர்கள், ‘பல்கலைக்கழக சுதந்திரத்துக்குக் குரல் கொடுத்தால் தங்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும், டத்தோ பட்டம் பெற முடியாமல் போகும் என்றெண்ணி அஞ்சுகிறார்கள்’.
இக்குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் முன்னாள் சட்ட விரிவுரையாளார் அப்துல் அசீஸ் பாரி-யும் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக (யுஐஏம்) விரிவுரையாளர் மஸ்லி மாலிக்கும் ஆவர்.
நேற்றிரவு ‘பல்கலைக்கழக சுதந்திரமும் உரிமைகளும்’ என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது அவர்கள் இவ்வாறு கூறினர்.
“அவர்கள் தங்கப் பதக்கம் பெறுவதற்கு எம்ஸ்டர்டேம் அல்லது ஜினிவா செல்வார்கள், ஐந்து-நட்சத்திர தங்குவிடுதியில் தங்குவார்கள்…..அதன்பின் உயர்கல்வி அமைச்சுக்குச் சென்று பதவிக்காலத்தை நீட்டிக்க முடியுமா, உதவி வேந்தர் அல்லது துணை வேந்தர் ஆகும் வாய்ப்பு இருக்குமா என்று தேடுவார்கள். இதுதான் இப்போது நாட்டில் நடக்கிறது”, என்று அசீஸ் (வலம்) கூறினார்.
அரசமைப்புச் சட்ட நிபுணரான அவர், இதற்காக அரசாங்கத்தையோ அம்னோவையோ குற்றம் சொல்ல முடியாது, கல்வியாளர்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள் என்றார்.
“பெரும்பாலோர் பல்கலைக்கழகத்தில் இருப்பதே பிழைப்புக்காகத்தான்… குறிப்புப்புத்தகத்துடன் விரிவுரை மண்டபத்துக்குள்; செல்வார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.
“புதிய சிந்தனை கிடையாது, ஆய்வு செய்யமாட்டார்கள், எதையும் படைப்பதுமில்லை. ஏனென்றால் பயம் .சிபாரிசு மூலமாக பல்கலைக்கழகத்துக்கு (பேராசிரியர்களாக, துணை வேந்தர்களாக, உதவி வேந்தர்களாக) வந்திருப்பார்கள்- அதனால், பயப்படுகிறார்கள்.
“தங்களை அடிமைகளாக்கிக் கொண்டார்கள்… கல்விச் சுதந்திரத்துக்கு அவர்கள் வித்திடவில்லை…..பல்கலைக்கழகங்களை அரசாங்க நிர்வாக அமைப்பில் ஒரு பகுதியாக வைத்திருப்பதே தங்கள் பொறுப்பு என்றெண்ணிச் செயல்படுகிறார்கள்”, என்றார்.
அதேவேளையில், கல்வியாளர்கள் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் சமுதாயத்துக்காகக் குரல் கொடுத்தால் அவர்கள் வேண்டாதவர்களாகி விடுகிறார்கள். தாமே அதற்கோர் எடுத்துக்காட்டு என்றாரவர்.
“எங்களுக்கு ஆராய்ச்சிக்கு மான்யம் கிடைக்காது. பேசுவதற்கு இடமளிக்க மாட்டார்கள், கீழறுப்புவாதிகளாகக் கருதப்பட்டு பல்கலைக்கழகத்தைவிட்டே வெளியேறும் அளவுக்கு நெருக்குதல் கொடுப்பார்கள்”.
அசீஸ் பாரி 2011-இல், சிலாங்கூர் சுல்தானைக் குறை சொன்னதை அடுத்து யுஐஏஎம்-மை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
அதே கருத்தையே மஸ்லி (வலம்)யும் எடுத்தொலித்தார். பல்கலைக்கழகக் கல்வியாளர்களும் மாணவர்களும் பயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
“கல்வியாளர்கள் ‘டத்தோ’ ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பெற தங்கள் அரசியல் எஜமானர்களின் தயவை எதிர்பார்க்கிறார்கள். எச்சரிக்கை கடிதம் வருமோ என்றெண்ணி அஞ்சுகிறார்கள்.
“துணிச்சலை, சுய அடையாளத்தை, சிந்திக்கும் திறனை இழந்து நிற்கிறார்கள். ஏன்? நெஞ்சு நிறைய பயம்.
“மாணவர்களுக்கு (உயர்கல்விக் கடன்) இரத்துச் செய்யப்படும் என்று பயம். குறைந்த மதிப்பெண்கள் கிடைக்கும் என்று பயம், பல்கலைக்கழகத்தைவீட்டு நீக்கப்படலாம் என்று பயம், எல்லாவற்றையும் நினைத்து பயப்படுகிறார்கள்”.
மாணவர்களின் சிந்தனை வளரக்கூடாது என்பதற்காக இந்த ‘பயக் கலாச்சாரம்’ நிலைநிறுத்தப்படுகிறது.
“அவர்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது. அது பொறுப்பான அறிவுஜீவிகளாக, சமுதாய மாற்றத்துக்குக் குரல் கொடுக்க முடியாதபடி கல்வியாளர்களான எங்களையும் கட்டுப்படுத்துகிறது”, என்றார்.
இலவசக் கல்விக் கொள்கை தேவை
மூன்றாவது பேச்சாளர் ‘listen, listen’ காணொளி வழி திடீர் பிரபலம் பெற்ற யுனிவர்சிடி உத்தாரா மாணவி கே.எஸ். பவானி.
இலவசக் கல்வி தேவை என்பதை வலியுறுத்திய பவானி, தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி ஒரு விற்பனைப் பொருளாகி விட்டது என்றார்.
“எல்லாமே வியாபாரம் ஆகிவிட்டது. தொழில் செய்யவே பல்வகை பல்கலைக்கழகங்களை அமைக்கிறார்கள். கல்வியின் தலையாய நோக்கம் அறிவாற்றலை வளர்ப்பதாக இருத்தல் வேண்டும். ஆனால், அது இப்போது வணிக நோக்கம் கொண்டதாக மாறிவிட்டது”, என்றார்.
மலேசியாவால் பல்கலைக்கழகம்வரை இலவசக் கல்வி வழங்க முடியும் என்று கூறிய பவானி, அதற்காக பல்கலைக்கழக மாணவர்களும் இளைஞர்களும் கோரிக்கை விடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்குப் பதிலளித்த மஸ்லி, புதிய பட்டதாரிகள் திறமைகுன்றியவர்களாக இருப்பதாய் நிறுவனங்கள் புகார் செய்வதாகக் குறிப்பிட்டு அதற்குப் பல்கலைக்கழகத்தைக் குறை சொல்லக்கூடாது என்றார்.
“12-ஆண்டு அடிப்படைக் கல்வித் திட்டத்தைத்தான் குறை சொல்ல வேண்டும்”, என்று கூறி தொடக்கநிலை, இடைநிலைக் கல்விமீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நேற்றைய கருத்தரங்கை அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்), கும்புலான் அக்டிவிஸ் மஹாசிஸ்வா இண்டிபெண்டெண்ட் (காமி), சுயேச்சை மாணவர் முன்னணி (இன்ஸ்டெப்) ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. அது கோலாலம்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்ப்ளி மண்டபத்தில் நடந்தது.