பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை ரத்துச் செய்தது சிலாங்கூர் மாநில அரசு

condoபுகழ் பெற்ற பத்துமலைக் கோவில் வளாகத்துக்கு அருகில் அமையவிருந்த சர்ச்சைக்குரிய ஆடம்பர அடுக்குமாடி வீட்டு (கொண்டோமினியம்) திட்டத்தை ரத்துச் செய்ய சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் முடிவு செய்துள்ளார்.

“அந்தத் திட்டத்தை மறுபரிசீலினை செய்வதற்காக நிறுவப்பட்ட சுயேச்சைக் குழுவின் விளக்கத்தைப் பெற்ற பின்னர் 26 மாடி Dolomite Park Avenue condominium-மைக் கட்டுவதற்கு Dolomite Properties Sdn Bhdக்கு வழங்கப்பட்ட மேம்பாட்டு திட்ட அங்கீகாரத்தை சிலாயாங் நகராட்சி மன்றம் ரத்துச் செய்ய வேண்டும் என நான் முடிவு செய்துள்ளேன்,” என காலித் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

பொது மக்களுடைய பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அந்த முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

“பொது மக்களுடைய பாதுகாப்பு இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் எல்லாத் தரப்புக்களும் அந்த முடிவை சாதகமாக ஏற்றுக் கொள்ளும் என நான் நம்புகிறேன்,” என காலித் குறிப்பிட்டார்.

பத்துமலையில் புகழ் பெற்ற முருகப் பெருமான் ஆலயத்திற்கு அருகில் அமைந்த அந்த ‘கொண்டோ’ திட்டம் சுற்றுச்சூழலுக்கும் கோவிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி அந்தத் திட்டம் முடக்கி வைக்கப்பட வேண்டும் என மஇகா-வுடன் தொடர்புடைய கோவில் குழு கேட்டுக் கொண்ட பின்னர் சர்ச்சை மூண்டது.

condo1அடுத்து 2007லிலும் 2008லும் அந்தத் திட்டத்துக்கு அங்கீகாரம் அளித்தது மீது கடந்த நவம்பர் மாதம் பிஎன் -னும் பக்காத்தானும் ஒன்றையொன்று பழி சுமத்திக் கொண்டன.

அந்தப் பிரச்னையை ஆராய காலித் ஐவர் கொண்ட குழுவை டிசம்பர் மாதம் நியமித்தார்.

அந்தக் குழு தனது முதலாவது கூட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியதாக காலித் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் கட்டுமான நிலை பற்றியும் பத்துமலையில் உள்ள கட்டிடங்கள் அவற்றின் பாதுகாப்பு நிலைகள் பற்றியும் நகர, கிராமப்புற திட்டத் துறை விவரமாகத் தெரிவித்தது.”

அந்த ‘கொண்டோ’ திட்டத்தை ரத்துச் செய்வது என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என காலித் சொன்னார்.

அந்த முடிவு பற்றிக் கருத்துரைத்த சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ, இழப்பீடு பற்றி பேசி முடிவு செய்யலாம் என்று கூறினார். மேம்பாட்டாளர்கள், வாங்கியவர்கள் போன்ற எல்லாத் தரப்புக்களுடைய நலன்களும் நியாயமான அளவுக்குக் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.