சாபாவில் நடைபெறும் அரச ஆணைய விசாரணை (ஆர்சிஐ), பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்லும் சேர்ந்து நடத்தும் “நாடகமா” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கேள்வி கேட்பவர் முன்னாள் கோலாலும்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராகிம். இருவரும், வாக்களிப்பதற்காக வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டதை மூடிமறைக்கப் பார்க்கிறார்களா என்றவர் வினவினார்.
ஆர்சிஐ-க்கு விதிக்கப்பட்டுள்ள எட்டு வரையறைகளில் எதுவுமே அந்தத் துரோகச் செயலுக்குக் காரணமானவர்களை அடையாளம் காண்பிப்பது பற்றியோ அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க ஆர்சிஐ பரிந்துரைப்பது பற்றியோ குறிப்பிடவில்லை என்பதை மாட் ஜைன் சுட்டிக்காட்டினார்.
“அந்த வகையில் நஜிப்பும் கனியும் 1992-க்கும் 1995-க்குமிடையே நிகழ்ந்த ஒப்ஸ் டுரியானுக்குக் காரணமான துரோகியைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.
“ஒரு போலி குடியுரிமைச் சான்றிதழைக் கொடுக்கும் முயற்சிகூட ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல், அதிகார அத்துமீறல் என்று திட்டமிட்ட குற்றச்செயலாகக் கருதப்படும்போது அசீஸ் ஷம்சுடின் வீட்டிலிருந்து 40,000 அடையாள அட்டைகள் வெளியிடப்பதை என்னவென்று சொல்வது?”, என்று மாட் ஜைன் வினவினார்.