சிலாங்கூர் பிஎன் நில அபகரிப்பு ஊழல் மூலம் கிடைத்ததாகச் சொல்லப்படும் 24 துண்டு நிலங்கள் மீது கிடைத்த எல்லா ஆதாயத்தையும் அவை மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது என்றால் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது.
பின்னர் மாநில அரசாங்கம் அந்தப் பணத்தை மக்கள் நலனுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் செலவு செய்யலாம் என அந்தக் கட்சியின் பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா கூறினார்.
ஒரு துண்டு நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட அடுக்குமாடி வீட்டுத் திட்டம் வீடமைப்பு வசதிகளை வழங்குவதால் மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டது என கோத்தா ராஜா அம்னோ தொகுதித் தலைவர் அம்சா உமார் விடுத்துள்ள அறிக்கைக்கு புவா பதில் அளித்தார்.
பூமிபுத்ராக்களுக்கும் ஏழு விழுக்காடும் அம்னோ உறுப்பினர்களுக்கு 12 விழுக்காடும் வீட்டு விலையில் கழிவு கொடுக்கப்பட்டதாகவும் அம்சா தெரிவித்தார்.
2007ம் ஆண்டு ஆயிரம் ரிங்கிட் பிரிமியம் கட்டணத்துக்கு அந்த ஏழு ஏக்கர் நிலத்தை கோத்தா ராஜா அம்னோ தொகுதியும் ஷா அலாம் மாநகராட்சி மன்றமும் கூட்டாக வாங்கின.
அப்போது அந்த நிலத்தின் சந்தை மதிப்பு 700,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டதாக ஸ்ரீ மூடா சட்டமன்ற உறுப்பினர் ஷுஹாய்மி ஷாபியி கூறினார்.
அம்சாவின் பதில், பிரபலமான ஜார்ஜ் ஒர்வெல்லின் ‘விலங்குப் பண்ணை’ என்னும் ஆங்கிலப் புத்தகத்தில் கூறப்படுகின்ற “எல்லா விலங்குகளும் சமமானவை ஆனால் சில விலங்குகள் மற்றவற்றைக் காட்டிலும் மேலானவை” என்ற ஒரு சொற்றொடரைப் போன்று உள்ளது என்றும் புவா தெரிவித்தார்.
“ஒர் அரசியல் கட்சியான அம்னோ, அதன் தலைவர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகிய தரப்புக்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை அம்னோ அறியவில்லை என்பது மட்டும் நிச்சயம்.”
“அத்தகைய நடவடிக்கைகள் அம்னோ, பிஎன் ஆதாயத்துக்காக மக்கள் செல்வத்தைத் திருடுவதிலிருந்து மாறுபட்டதில்லை என்பது மீது அவர்கள் வருத்தம் அடைவதாக காட்டிக் கொள்ளவே இல்லை,” என்றார் புவா.
அந்த விவகாரம் மீது மௌனமாக இருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அதனை விளக்குவதோடு, பொறுப்பேற்கவும் வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“இல்லை என்றால் அவரது ‘உருமாற்ற வேண்டுகோள்’ மலேசியர்களை ஏமாற்றுவதற்கான சுலோகம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை” என புவா மேலும் குறிப்பிட்டார்.