-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், ஜனவரி 25, 2013
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது 13 விழுக்காடாக இருந்த பூர்வகுடி வாக்களார்களின் எண்ணிக்கை, இப்போது திடிரென இருபது விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளதானது அதிர்ச்சியளிக்கிறது.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் 2008-ல் ஏறத்தாழ 3,000 வாக்காளர்களாக இருந்த பூர்வகுடியினர், கண் இமைக்கும் காலத்தில் சுமார் 6,000 ஆக உயர்ந்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த 55 ஆண்டுகளாக ஏறத்தாழ 3,000 பூர்வ குடி வாக்களர்களை மட்டுமே கொண்டிருந்த கேமரன் மலை, 6000 ஆக உயர்ந்தது எப்படி?
மொத்தமுள்ள பூர்வ குடியினரின் வாக்குகளில் 95 விழுக்காட்டினர் தேசிய முன்னணிக்கு வாக்களித்ததில் வியப்பொன்றுமில்லை. சென்ற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் களமிறங்கிய மஇகா, இத்தொகுதியை வெறும் 3,117 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தலைதப்பியது.
இதை கருத்தில் கொண்டோ என்னவோ, வருகின்ற பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் தேசிய முன்னணிக்கு தோல்வி பயம் தொற்றிக்கொண்டுவிட்டதால், பூர்வ குடியினரின் வாக்குகளால் மட்டுமே தேசிய முன்னணியை கேமரன் மலையில் காப்பற்ற இயலும் என்பதால் இந்த பூர்வகுடி மக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
உதாரணத்திற்கு கடந்த தேர்தலின்போது போஸ் (POS BETAU) என்கிற கிராமத்தில் 680 வாக்காளர்களே இருந்துள்ளனர். ஆனால், இப்போது அந்த எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்தது எப்படி?
இதனால்தானோ என்னவோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, கேமரன் மலை தொகுதி பாதுகாப்பான தொகுதி என டமாரம் அடிக்கிறார்கள்.