பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புத்தாண்டு கடிதம் மீது மேலும் பல புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒரு முகவரிக்கு அடையாளம் தெரியாத ஒருவருடமிருந்து அத்தகைய கடிதங்கள் வந்துள்ளதாக எதிர்த்தரப்புக்கு இன்னொரு புகார் கிடைத்துள்ளது.
புக்கிட் காசிங் தொகுதியைக் கவனித்து வரும் டிஏபி சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ அந்தத் தகவலை வெளியிட்டார். அந்த வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அண்மைய புகார் கிடைத்ததாக அவர் சொன்னார்.
“பிஎன் -னிடமிருந்து 28 கடிதங்கள் அந்த வீட்டு உரிமையாளருக்கு கிடைத்துள்ளன. அதில் முகவரியிடப்பட்டுள்ள யாரையும் அவருக்குத் தெரியாது,” என அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்
அந்த நிருபர்கள் சந்திப்பின் போது கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லான் வெங் சான், டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்-கின் அரசியல் செயலாளர் கஸ்தூரி பட்டு ஆகியோரும் உடனிருந்தார்கள்.
வாக்காளர் பட்டியலைச் சோதனை செய்த போது அதே முகவரியில் அடையாளம் தெரியாத 37 பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது அதை விட மோசமானதாகும் என இயோ சொன்னார்.
“அவர்கள் ஆவி வாக்காளர்களா என நாங்கள் நஜிப்பிடமும் சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட்-டிடம் கேட்க விரும்புகிறோம்,” என்றார் அவர்.
“அந்த ஆவி வாக்காளர்கள்” பற்றிய விவரங்களை வெளியிடுவதின் மூலம் பிஎன் தனது சொந்த கோலைப் போட்டுக் கொள்வதாகத் தெரிகிறது,” என்றும் இயோ குறிப்பிட்டார்.
“அவர்கள் புத்திசாலிகள் அல்ல என்று நான் சொல்ல மாட்டேன். அவர்கள் அறியாத அளவுக்கு மிக அதிகமாக ஆவி வாக்காளர்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.”
கடந்த புதன் கிழமையன்று அடையாளம் தெரியாத இந்திய மாது ஒருவருக்கு முகவரியிடப்பட்ட கடிதம் ரவாங் குடியிருப்பாளர் ஒருவருக்கு கிடைத்ததாக பிகேஆர் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் கான் பெய் நீ கூறியிருந்தார் சுபாங் ஜெயா, கின்ராரா மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளிலிலிருந்தும் இது போன்ற புகார்கள் டிஏபி-க்குக் கிடைத்துள்ளதாகவும் இயோ தெரிவித்தார்.
“அடையாளம் தெரியாத நபர்களுக்கு முகவரியிடப்பட்ட ஒன்று முதல் மூன்று கடிதங்கள் கிடைத்துள்ளதாக மேலும் இரண்டு புகார்கள் அந்தக் கட்சிக்கு வந்துள்ளன.”
இது போன்ற கடிதங்கள் யாருக்கும் கிடைத்தால் அது பற்றிப் பக்காத்தானுக்குத் தகவல் கொடுக்குமாறு இயோ பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வாக்காளருக்கு பழைய அடையாளக் கார்டு எண்
இன்னொரு நிலவரத்தில் 1988ம் ஆண்டு பிறந்த ஒருவருடைய பழைய அடையாளக் கார்டு எண் இன்னொரு வாக்காளரை பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக டிஏபி தகவல் வெளியிட்டுள்ளது.
ஜென்சன் எனப் பெயருடைய அந்த ஆடவர் வாக்காளராகப் பதிவு செய்து கொள்வதற்கு பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா-வின் அலுவலகத்துக்குச் சென்றதாக கஸ்தூரி சொன்னார்.
அவருடைய மை கார்டில் பழைய அடையாளக் கார்டு எண் இருப்பதைக் கண்டு டிஏபி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
“அவர் 1988ல் பிறந்தார். பழைய அடையாளக் கார்டு எண் இருக்கக் கூடாது. அதனால் அவர் தமது பதிவு பாரத்தை ‘சோதனை’ செய்வதற்காக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார்.”
“அதற்கு பின்னர் தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் தேடிய போது அந்த பழைய அடையாளக் கார்டு எண் இன்னொரு வாக்காளருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது,” என கஸ்தூரி சொன்னார்.
சிலாங்கூரில் புதிய வாக்காளர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை 2011ம் ஆண்டு நான்காவது கால் பகுதியில் மாநில அரசாங்கம் மேற்கொண்டதாகவும் அவர்களில் 134,000 பேரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே கூறிக் கொண்டுள்ளார்.