வெளிநாட்டு வாக்காளர் 30 நாட்கள் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்ற விதியை நீக்குங்கள்

lokeவெளிநாட்டு வாக்காளர் ஒருவர் அஞ்சல் வாக்காளராக தகுதி பெறுவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 30 நாட்கள் மலேசியாவில் தங்கியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை கைவிடுமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான முன்னாள் நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினரான அந்தோனி லோக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அந்தத் தேவை ‘நியாயமற்றது’ என வருணித்த அவர், விடுமுறைக்கு மட்டும் நாட்டுக்கு திரும்பும் பல வெளிநாடுகளில் வேலை செய்யும் பல மலேசியர்களை அந்த விதிமுறை அகற்றி விடும் என்றார்.

“ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்கள் திரும்ப வேண்டும் என்பதே நாங்கள் ஒப்புக் கொண்ட விஷயமாகும். அதனைக் கூட நாங்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழுக் கூட்டத்தில் விவாதித்துள்ளோம்.”

“ஒருவர் வெளிநாட்டு வாக்காளராக இருப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு திரும்ப வேண்டும் என பக்காத்தான் ராக்யாட்டின் மூன்று உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டோம். ஆனால் எவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்படவில்லை.”

“ஐந்து ஆண்டுகளில் 30 நாட்கள் என இசி விதித்துள்ள நிபந்தனை உண்மையில் நியாயமற்றது,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.

“வெளிநாட்டு வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உண்மையாக இருந்தால் அந்த நிபந்தனை அகற்றப்பட வேண்டும் என ராசா எம்பி-யுமான லோக் சொன்னார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திரும்புவது மட்டும் போதும்.”