பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவசரம் அவசரமாக காசா பகுதிக்கு வருகை மேற்கொண்டதன்வழி அனைத்துலக அரங்கில் பெரும் பிழை செய்துவிட்டார் என்கிறார் மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.
பிரதமர் காசா பகுதிக்கு மேற்கொண்ட வருகையின்போது மற்ற தலைவர்கள் வழக்கமாகப் பின்பற்றும் அரசதந்திர நடைமுறையைப் பின்பற்றாதது விவேகமற்ற செயலாகும் என்று அன்வார்(வலம்) கூறினார்.
”மேற்குக் கரைக்குஅல்லது காசா பகுதிக்கு வருகை மேற்கொள்வது தப்பல்ல….ஆனால், முதலில் இருதரப்பினரையும் சந்தித்திருக்க வேண்டும்”, என்று பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
“இங்குள்ள முஸ்லிம்களைத் திருப்திபடுத்தும் வேகத்தில் பாலஸ்தீனத்துன் இரு தரப்புகளுக்கும் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் கவனிக்கத் தவறிவிட்டார்”.
பாலஸ்தீனர்களுடன் தொடர்புகளை வைத்துள்ள எகிப்து, துருக்கி போன்ற நாடுகள் அதைத்தான் செய்கின்றன என்றும் அன்வார் கூறினார்.
மலேசிய ஊடகங்கள் நஜிப்பின் பாலஸ்தீன வருகை பற்றி பரவலாக செய்திகள் வெளியிட்டு கொண்டாடுகின்றன. ஆனால், பாலஸ்தீன அதிபர் மஹமூட் அப்பாஸ் அவர் பாலஸ்தீன அரசியலில் பிளவு உண்டுபண்ண முயல்கிறார் என்று குறைகூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் கட்சியும் மேற்குக் கரையில் ஃபாத்தா கட்சியும் ஆட்சி செலுத்துகின்றன.
2006-இல், அங்கு நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இஸ்மாயில் ஹனியே-யைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கமும் அமைந்தது. ஆனால், அனைத்துலக சமுதாயம் அதை அங்கீகரிக்க மறுத்தது.
மாறாக, ஐநாவும் உலக நாடுகளும் மஹ்மூட் தலைமையில் செயல்படும் ஃபாத்தாவைத்தான் பாலஸ்தீனத்தின் அரசாங்கமாக மதிக்கின்றன.
குறைகூறலால் துணுக்குற்றவாய், நஜிப் பாலஸ்தீன விவகாரங்களில் தலையிடும் நோக்கம் தமக்கு இருந்ததில்லை என்று மறுத்தார். அங்கு ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கே என்றும் குரல் கொடுத்து வந்திருப்பதாகக் கூறினார்.
நஜிப் அரசாங்கம் திடீரென்று ஹமாஸுடன் நெருங்கி உறவாடுவது ஏன் என்று அன்வார் கேள்வி எழுப்பினார்.
“அரசியல்தான் காரணம் என்று நினைக்கிறேன். அம்னோவும் மலேசிய அரசாங்கமும் இதற்குமுன் ஹமாஸை அங்கீகரிக்க மறுத்தன. அவர்கள் இங்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்வதைக்கூட அனுமதித்ததில்லை.
“இதற்கு முரணாக, நாங்கள் முகம்மட் அப்பாஸையும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களின் நியாயமான ஆசைகளையும் ஹமாஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் பிரதமர் இஸ்மாயில் ஹனியே-யையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றத்திலும் சொல்லி இருக்கிறோம்”, என்றார்.
பாலஸ்தீனப் போராட்டத்தை ஆதரிப்பது வரவேற்கத்தக்கதுதான், ஆனால், நிலவரத்தை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்று அன்வார் மேலும் கூறினார்.